கடந்த 2019 ஆண்டு இறுதியில் உலகமே புத்தாண்டை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் சீனாவில் பரவ தொடங்கிய கோவிட் 19 உலக நாடுகளையே அச்சுறுத்தியது. லட்சக்கணக்கான உயிர்களை பறித்து, மக்களை வீட்டிற்குள்ளேயே முடங்கச் செய்து ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் பல பரிணாம வடிவங்களில் தொடர்ந்து நம் வாழ்வில் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் 2020 டிசம்பரில் ஆல்பா (பி.1.1.7), பீட்டா (பி.1.351) மற்றும் காமா (பி.1) என்று மூன்று திரிபுகளை கண்டது. தொடர்ந்து 2021 டிசம்பரில், ஊரடங்குகளில் இருந்து தளர்வு ஏற்பட தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு ஒமிக்ரான் வகை திரிபு மீண்டும் ஊரடங்கிற்கு காரணமாக அமைந்தது.
அதே போன்று 2022 டிசம்பரில் பெரிய மாறுபாடு எதுவும் இல்லை என்றாலும் பிஏ.2 மற்றும் பிஏ.5 போன்ற துணை வகைகள் இருந்தன. இவை ஒமிக்ரான் வகைக்குள் அடங்கும்.
தற்போது இந்த ஆண்டு டிசம்பரில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவுகிறது. ஆனால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜே.என்.1 என்றால் என்ன?
தற்போது உலகம் முழுவதும் ஜே.என்.1 திரிபு வேகமாக பரவி வருகிறது. இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வகை தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லியில் உள்ள புஷ்பாவதி சிங்கானியா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுரையீரல், கிரிட்டிகல் கேர் மற்றும் ஸ்லீப் மெடிசின் பிரிவின் தலைவர் டாக்டர் ஜி.சி.கில்னானி, “தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா காய்ச்சல், தொண்டை வலி, இருமல் மற்றும் தலைவலி போன்ற லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது.
இருப்பினும், வயதானவர்கள், பருமனானவர்கள் மற்றும் சிஓபிடி, நீரிழிவு நோய், புற்றுநோய்கள் உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏன் எப்போதும் டிசம்பரில்?
குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் 2வது அலையின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை நேச்சர் இதழ் வெளியிட்டிருந்தது. அதில் கொரோனா தொற்று வானிலை காரணமாக எளிதில் பரவுகிறது என்று குறிப்பிட்டிருந்தது.
கோடை காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு நகரும் போது வெப்பநிலை குறைவதால் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியக் கண்டங்களில் கோவிட் 19 தீவிரமாகப் பரவியது என்றும் குறிப்பிட்டிருந்தது.
சீனாவின் சிச்சுவான் சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதனை உறுதிப்படுத்தினர். வெப்பமான பகுதிகளில் வாழ்பவர்களை விட குளிர்ச்சியான பகுதியில் வாழ்பவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
விடுமுறை பயணங்களாலே கோவிட் பரவியது
கொரோனா வைரஸ் டிசம்பர் மாதம் சீனாவில் உருவானது. கொரோனா வைரல் உலகின் பிற பகுதிகளுக்கு பரவுவதற்கு காரணமாக இருந்ததும் டிசம்பர் மாதம் தான். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் டிசம்பர் மாதம் என்பது விடுமுறை காலமாகும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா வைரஸ் உலகின் பிற பகுதிகளில் அதிகமாக பரவியது. அந்த வகையில் இந்த ஆண்டும் டிசம்பர் மாதம் விடுமுறை காலமான தற்போது ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அச்சமடைய வேண்டாம்
இந்த புதிய வகை தொற்றால் அச்சமடைய வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், பருமனானவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தொற்று நோய்கள் ஆலோசகர் டாக்டர் தேவாஷிஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மற்றும் முகக்கவசம் வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட ஆயுதமாக இருக்கிறது என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் பொதுவெளிகளில் மாஸ்க் அணிபவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தமிழ்நாட்டை விட உபி முன்னேறிடுச்சா? அண்ணாமலை கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்: அப்டேட் குமாரு
எது ப்ளைட் புடிச்சு வர்றது அம்புட்டு கஷ்டமா?… மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!