நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். கல்வி துறை சார்ந்த பண பலன் கோரிய இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த உத்தரவை முறையாக செயல்படுத்தவில்லை என்று ஞானபிரகாஷம் 2020ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது சம்பந்தமாக அப்போதைய கல்வித் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் (தற்போது நெடுஞ்சாலைத்துறை செயலாளராக உள்ளார்) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கடந்த ஜூலை 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார்கள்.
அப்போது, “நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பலமுறை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று (ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வந்த போது, “மனுதாரர் ஞான பிரகாசம் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு காரணமான அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆன்டோ ஆகிய 3 பேருக்கும் 2 வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக மூன்று நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள் 3 பேரும் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக மதுரை நீதிமன்ற பதிவாளரிடம் சரணடைய வேண்டும்” என்று நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவு பிறப்பித்தார்.
தனது உத்தரவில், “2012ல் உத்தரவு பிறப்பித்தும், அந்த உத்தரவை கடந்த ஜூலை 24ஆம் தேதிதான் நிறைவேற்றியிருக்கின்றனர். இந்த வழக்கில் அதிகாரிகள் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை ஏற்க முடியாது. இது நம்பும்படியாக இல்லை.
இத்தனை ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் நேரில் ஆஜராக உத்தரவிட்டதும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபோன்ற அதிகாரிகளிடம் மென்மையான போக்கை கடைபிடித்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்” என்று நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை விதித்திருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தசூழலில் இன்று ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்று 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
என்ன நடந்தது?
மனுதாரர் ஞான பிரகாஷம் 1966ஆம் ஆண்டு துப்புரவு பணியாளராக நியமிக்கப்பட்டு, ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முழு நேர ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். 40 ஆண்டு கால பணிக்கு பிறகு ஜூன் 30, 2006 அன்று ஓய்வு பெற்றார்.
இதனிடையே 1971ல் 5 ஆண்டு காலம் பணி செய்த அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநில அரசு ஜி.ஓ வெளியிட்டது. இந்த ஜி.ஓ.வின் படி ஞான பிரகாஷம் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி 2012ல் பிறப்பித்த உத்தரவில், “ஞானபிரகாஷத்துக்கு பென்ஷன் பலன்களை நீட்டிக்கவும், ஓய்வுக்கு பிரகான வசதிகளையும் பெற்றுத் தர வேண்டும்” என்றும் உத்தரவிட்டிருந்தார். எட்டு வாரங்களுக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து அரசு சார்பில் 2013ல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 2019ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தாத காரணத்தால் 2020ல் ஞானபிரகாஷம் அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தான் நேற்று நீதிபதி பட்டு தேவானந்த், மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் உள்ளிட்டோருக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்திருந்தார். அந்த தண்டனை இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பிரதீப் யாதவ்?
பிரதீப் யாதவ் ஐஏஎஸ் 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்சை சேர்ந்தவர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளராக இருந்தார். இவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த போதுதான் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் கைத்தறி மற்றும் காதி துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.
2022 டிசம்பர் மாதம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து வழங்கி கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு அளித்து அப்போதைய தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்தார். அதில் ஒருவராக பிரதீப் யாதவ் இருந்தார்.
இதனிடையே 2022 ஜூன் மாதம் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் பிரதீவ் யாதவுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரியா
“2024-ல் நீங்கள் இங்கே…நாங்கள் அங்கே…” – தயாநிதி மாறன்
ஆடிப் பெருக்கு நாளில் காவிரியில் மூழ்கி மூவர் பலி!