இண்டியா கூட்டணி இன்று (செப்டம்பர் 18) நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரி, காரைக்காலில் இன்று பஸ், டெம்போ, ஆட்டோ ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல தனியார் பள்ளிகள், கல்லூரிகளும் விடுமுறை அறிவித்துள்ளன.
புதுவையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2-ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, விநாயகர் சதுர்த்திக்கு பிறகு 18-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
இதையடுத்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனாலும், முழுமையாக மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசு தரப்பில் அண்டை மாநிலங்களிலும் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதை சுட்டிக்காட்டி, பிற மாநிலங்களைவிட புதுவையில் மின் கட்டணம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதோடு, மக்களை பாதிக்கும் பந்த் போராட்டம் தேவையில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தினர். ஆனால், இந்த கோரிக்கையை இண்டியா கூட்டணி கட்சிகள் ஏற்கவில்லை. இதர மாநிலங்களை விட மறைமுகமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அந்தக் கட்சிகள் தெரிவித்தன. இந்த நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகள் அறிவித்தபடி இன்று (புதன்கிழமை) புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதையொட்டி வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் என பல தரப்பினரிடமும் இண்டியா கூட்டணி கட்சியினர் ஆதரவு திரட்டினர். இதுதொடர்பாக பேசியுள்ள பொதுமக்கள், “வழக்கமாக புதுவையில் சிறு அமைப்புகள், சிறிய கட்சிகள் பந்த் அறிவித்தாலே தனியார் பேருந்துகள் ஓடாது, கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என இண்டியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள பந்த் போராட்டத்தால் நாளை பேருந்துகள் ஓடாது.
ஏனெனில் பெரும்பாலான டெம்போ, பேருந்து, ஆட்டோ, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் இண்டியா கூட்டணி கட்சியினர் வசம் உள்ளது. இதனால் டெம்போ, ஆட்டோக்களும் நாளை இயங்காது. புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக பேருந்துகள் மாநில எல்லையிலிருந்து இயக்கப்படும். தமிழகத்திலிருந்து புதுவை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மாநில எல்லை வரை வந்து செல்லும்” என்றனர்.
முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்துள்ளன. இன்று நடைபெறும் காலாண்டு தேர்வையும் வேறு தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இருப்பினும் அரசு, பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் அரசுப் பேருந்துகளை இயக்குவார்கள் எனத் தெரிகிறது. பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் இருக்கலாம் என்பதால் தனியார் கல்லூரிகளுக்கும் மாணவர்கள் செல்வது கடினம். அதனால் பல தனியார் கல்லூரிகளும் இன்று (செப்டம்பர் 18) விடுமுறை அறிவித்துள்ளன.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெரியார் பிறந்த நாளுக்காக மாட்டிறைச்சி பிரியாணி விநியோகித்த 44 பேர் கைது!
பியூட்டி டிப்ஸ்: முகத்தை மிருதுவாக்கும் காபித்தூள் ஃபேஸ்பேக்!
ஹெல்த் டிப்ஸ்: பின்பாக்கெட்டில் கனமான பர்ஸ் வைப்பவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல் முதல் புதுச்சேரியில் பந்த் வரை!