போதை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர் சாதிக்குடன் தான் ஏன் புகைப்படம் எடுத்தேன் என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (மார்ச் 7) விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு டெல்லியில் நடந்த சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயன பொருட்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டார்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக சார்பில் திமுக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் போதைப் பொருள் தடுப்பில் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
ரூ.18 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்!
அப்போது டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், “தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல் துறை எடுத்த நடவடிக்கையில், 18,830 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. போதைப் பொருள் விற்பனை செய்தவர்களின் ரூ. 18 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. 1,501 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள்களை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். சுமார் 2 லட்சம் பேர் போதைப் பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு – பாராட்டு!
ஒட்டுமொத்த இந்திய அளவில் போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக இந்திய போதைப் பொருள் தடுப்பு முகமை தெரிவித்திருக்கிறது. இந்தியாவிலேயே, போதைப் பொருள் புழக்கம் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில்தான் எனவும் அந்த முகமை தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு மிக அமைதியான மாநிலமாக உள்ளது. சென்னை பாதுகாப்பான நகரம் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது” என்றார்.
நான் கொடுத்தது விருது அல்ல!
அப்போது குற்றவாளியாக கருதப்படும் ஜாபர் சாதிக்குடன் அவர் இருக்கும் புகைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சங்கர் ஜிவால், “இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். எனினும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். நான் சென்னை காவல் துறை ஆணையராக இருந்த போது நிறைய ஸ்பான்சர்கள் சிசிடிவி கேமராக்களை வழங்கினர். ஒரு 15 ஸ்பான்ஸர்கள் இருந்தனர். அவர்களில் ஜாபர் சாதிக்கும் ஒருவர்.
2013 ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் மீது எம்கேபி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2017இல் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிதான் இது.
போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் குற்றவாளி என தெரிந்ததும் அவர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நீக்கி, அவர்களிடமே திருப்பி கொடுத்து விட்டோம். அதற்கு பதிலாக வேறு 10 சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டோம்.
ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன. மேலும் அவருக்கு நான் கொடுத்தது விருது அல்ல. அது வெறும் பரிசு பொருள்தான்” என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புதுச்சேரியில் பந்த் : முக்கிய முடிவெடுத்த தனியார் பள்ளிகள்!
‘அப்பாவாக’ புரோமோஷன் பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ நடிகர்… புகைப்படம் உள்ளே!