திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை உள்ளது. இங்கு கார்த்திகை தீப கொண்டாட்டம் பத்து நாட்களுக்கும் மேல் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் காலையில் விநாயகர் சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர்.
கடந்த 10ஆம் தேதி மகாரத தேரோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நேற்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
முன்னதாக நேற்று அதிகாலை 3.40 மணி அளவில் அருணாச்சலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.
கார்த்திகை தீப நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றம் நீதிபதி மகாதேவன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, இளையராஜா மகன் கார்த்திக் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அரோகரா கோஷத்துடன் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
எனினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் குறைவு என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில் .
கடந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பேர் திருவண்ணாமலைக்கு வருகைத் தந்தனர். அதனால் இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக 24 தற்காலிக பேருந்து நிலையம், கார் பார்க்கிங் 50 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு 3,771 அரசு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன. இதில் 2 லட்சத்து 26ஆயிரத்து 260 பேர் பயணம் செய்தனர்.
ஆனால் இந்த ஆண்டு நேற்று டிசம்பர் 13 ஆம் தேதி 2 ஆயிரத்து 498 பேருந்துகள் இயக்கப்பட்டு, ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 880 பேர் பயணம் செய்துள்ளனர்.
அதாவது கடந்த ஆண்டைவிட 1,273 பேருந்துகளும் 76 ஆயிரம் பயணிகளும் குறைந்துள்ளனர் .
இதுமட்டுமின்றி தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி, ஆறுகள் கரைப்புரண்டு ஓடுவதாலும் தமிழகத்தில் வட, தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் தீபத்திற்கு செல்லக்கூடிய கூட்டம் 30 லட்சத்திற்கும் குறைவாக வந்திருப்பதாக கூறுகிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது: ஸ்டாலின் கடிதம்!
மற்றவர்கள் நினைப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்!
டாப் 10 செய்திகள் : தலைமை செயலாளர்களின் தேசிய மாநாடு முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வரை!