பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க முடிவு செய்தது ஏன் என்று சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று(அக்டோபர் 19) பரந்தூர் புதிய விமானநிலையம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
13 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் பரந்தூர் விமானநிலையத் திட்டத்தை கைவிடவேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கோரிக்கை வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பேசியபோது, 13 கிராம மக்களை பாதிக்காத வகையில் அரசு புறம்போக்கு இடங்களில் விமான நிலையத்தை அமைக்கவேண்டும் என்றார்.
இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி, பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோரும் பரந்தூர் விமானநிலையத் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
“சென்னை விமானநிலையம் நாட்டிலேயே 3 ஆம் இடத்தில் இருந்தது. தற்போது பயணிகளை கையாளுவதில் 5 ஆம் இடத்தில் உள்ளது.
5 ஆவது இடத்தில் இருந்த பெங்களூரு 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பயணிகள் வருகைக்கூட பக்கத்து மாநிலங்களைக் காட்டிலும் குறைந்துள்ளது.
அதேபோன்று சரக்குகளை கையாளுவதில் கூட 7 சதவீதம் தான் வளர்ந்து இருக்கிறோம். போக்குவரத்து வசதி சரியாக இல்லாத காரணத்தினால் தான் சரக்குகளை கையாளுவதில் தேக்கநிலை ஏற்படுகிறது.
எனவே பொருளாதாரத்தை முன்னேற்ற ஒரு புதிய விமானநிலையம் தேவைப்படுகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கான தேவையை நாம் தற்போதே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.
தற்போதுள்ள விமானநிலையத்தை விரிவுபடுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே தான் புதிய விமானநிலையத்தை அமைக்க அரசு முடிவு செய்தது.
வளர்ந்து வரக்கூடிய விமான தொழில்நுட்பம், அதன் மூலம் வரக்கூடிய தொழில் முதலீடுகளை கருத்தில் கொண்டால் புதிய விமானநிலையத் தேவை என்பது அவசியம்.
சென்னையைச் சுற்றி எந்த இடத்தில் விமானநிலையம் அமைத்தாலும் நிச்சயம் விவசாய நிலம் இருக்கும். அது நமது புவியியல் அமைப்பு.
பரந்தூர் முன்பாக பல இடங்களை ஆய்வு செய்தோம். ஆனால் அங்கெல்லாம் இதைக்காட்டிலும் பாதிப்புகள் அதிகமாக இருந்ததால் இறுதியில் பரந்தூரை தேர்வு செய்தோம்” என்று பதிலளித்தார்.
கலை.ரா
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: சட்டப்பேரவையில் தாக்கல்!
சென்னை மின்வாரிய அலுவலகத்தில் தீ!