ஆட்சி அதிகாரத்திற்காக என்றுமே அதிமுக அடிபணிந்தது இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 7) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசுகையில், “மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த திமுக 14 ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
அதே பாணியில் தான் தற்போது ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றார்.
கூட்டணி தர்மத்தால் எதிர்க்க முடியவில்லை!
தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றன. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அவர்களது பார்வை தேசிய அளவில் இருக்கிறதே ஒழிய, மாநில அளவில் இல்லை.
அதனால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த போது, மாநில நலனுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தபோது, கூட்டணி தர்மத்தின்படி நம்மால் எதிர்க்க முடியவில்லை.
அந்த நிலையை மாற்றுவதற்காக தான் ஓட்டுபோட்ட மக்களுக்கு விசுவாசமாக இருந்து நாடாளுமன்றத்தில் செயல்படுவதற்கு, தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கு, தேவையான திட்டங்களை பெறுவதற்கு, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக நமது கருத்துக்களை எடுத்து சொல்வதற்கு நாம் கூட்டணியில் இருந்து விலகி வந்து அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்திருக்கிறோம்.
என்னைப் பற்றி பேசுவதால் என்ன கிடைக்கப்போகிறது?
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அவரை நம்பி வாக்களித்து வெற்றி பெற்ற திமுக கூட்டணியில் உள்ள 38 எம்.பி.க்கள் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக முதல்-அமைச்சராக இருந்து வரும் ஸ்டாலின் ஆட்சியில் தான் செயல்படுத்தியதை கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். ஆனால் பிரசாரத்தில் என்னைப் பற்றியும், அதிமுக பற்றியும் தான் அதிகம் பேசுகிறார். என்னைப் பற்றி பேசுவதால் அவருக்கு என்ன கிடைக்கப்போகிறது?
தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும்போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அதிமுகதான்.
அதிமுக அடிபணிந்தது இல்லை!
நீட் தேர்வை திமுகவும் காங்கிரசும் கொண்டு வந்தது. இன்று ரத்துசெய்வோம் என்று சொல்வதும் காங்கிரசும் திமுகவும் தான். இப்படி மக்களிடம் இரட்டை வேடம் போடுவது ஏன்? நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்?
ஆட்சி அதிகாரத்திற்காக என்றுமே அதிமுக அடிபணிந்தது இல்லை.அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில்தான் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் தனது ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசுவது இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”எனக்கும் ரூ.4 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” : நயினார் நாகேந்திரன்
Kavin: ஸ்டார் ரிலீஸ் தேதியை ‘லாக்’ செய்த படக்குழு?
“கார்த்தி மறக்க மாட்டான்…” : தந்தை ப. சிதம்பரம் கைது குறித்து கார்த்தி சிதம்பரம் பேட்டி!