50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்? பட்டியலிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
50 ஆயிரம் மாணவர்கள் ஏன் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதவில்லை என்று சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று (மார்ச் 24) காலை சட்டமன்றம் கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, ”இதுவரை இல்லாத அளவிற்கு 50,000 பேர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. இதற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மமக அப்துல் சமது உள்ளிட்டோர் ஆகியோர் வலியுறுத்தினர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான செங்கோட்டையன் பேசுகையில், “ப்ளஸ் டூ தேர்வில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை பேர் ஏன் தேர்வு எழுதவில்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்று அரசு சொல்லும் நிலையில், இந்த ஆண்டு 50,000 பேர் தேர்வு எழுதவில்லை எனச் சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பள்ளிக் கல்விக்காக 40,299 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 50 ஆயிரம் பேர் தேர்வெழுதாமல் எங்கே போனார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்திருக்கிறது. மார்ச் 24, 2020-ல் தான் முதன்முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமல்ல அனைத்து துறையிலும் ஒரு விதமான மாற்றம். ஆனால் 3 நாள் பள்ளிக்கு வந்தால் போதும், அமைச்சர் சொல்லிவிட்டார் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
பத்திரிக்கைகள் வெளியிடுகின்ற செய்திகள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்தியாக இருக்க வேண்டுமே தவிர விழிகளை பிடுங்கி எரியும் செய்தியாக இருக்கக் கூடாது.
2020-21 கல்வியாண்டில் கோவிட் தொற்று காரணமாக 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அந்த மாணவர்கள் தான் தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக 2021-22 ல் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்குப் பதிவு செய்த 8,85,051 மாணவர்களில் 41,306 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 83,811 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. 7,59,874 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களும், வருகை தராதவர்களும் 1,25,177 மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
11 ஆம் வகுப்பை சேர்ந்த 18,000 மாணவர்கள் உட்பட முந்தைய ஆண்டு பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி மூலம் பல்வேறு வகுப்புகளில் சேர்க்கப்பட்ட 1,90,000 மாணவர்கள் உள்ளடங்குவார்கள்.
இது போல பள்ளிகளில் சேர்க்கப்பட்ட அந்த 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களில் 78,000 பேரை பரீட்சை எழுத வைத்திருக்கிறோம். ஆனால் அப்படியே விட்டிருந்தால் 1,90,000 மாணவர்களும் பள்ளிக்கே வராமல் போயிருப்பார்கள்.
கோவிட் தொற்றுக்கு முன்பு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 50 ஆயிரமாக இருந்தது.
11 ஆம் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை தராத 1,25,177 மாணவர்கள், 2022-23 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்குப் பதிவு செய்து 8,36,593-ல் உள்ளடங்குவார்கள்.
இதில் மொழிப்பாட தேர்விற்கு வருகை தராதவர்கள், 47,943 மாணவர்கள். அரசுப்பள்ளிகளில் 38,015 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8,848 , தனியார் பள்ளிகளில் 1,080 மாணவர்கள் அடங்குவர். இதில் 40,509 மாணவர்கள் 11 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகை தராதவர்கள்.
நீண்ட காலம் வருகை புரியாத மாணவர்களையும் இடைநிற்றல் மாணவர்களையும் தேர்வு எழுதுவதில் விடுபடாமல் இருப்பதையும் பள்ளிக்கல்வி முறையில் இருந்து முழுமையாக விடுபடாமல் இருப்பதை உறுதி செய்திடும் வகையில், மாணவர்களின் வருகை பதிவேட்டில் எந்த வரன்முறையும் கடைப்பிடிக்கப்படாமல் வாய்ப்பளிக்கப்பட்டது” என்று விளக்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,
”வரும் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு எழுதுவதற்குக் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டும்.
தற்போது தேர்வு எழுதாத மாணவர்கள் கள அலுவலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக கண்டறியப்பட்டு, பள்ளி அளவில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணைத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கச் சிறப்பு மேலாண்மை குழு தொடர்ந்து செயல்படும்.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வட்டார வளமையாசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு அடங்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழுவினை அமைத்து பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் பட்டியல் பள்ளி மேலாண்மைக் குழுவுடன் பகிரப்படும்.
பட்டியலில் உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு ஜூலை மாதம் நடைபெறும் துணைத் தேர்வு குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து தேர்வு எழுத வைக்கும் செயல்பாட்டில் கூடுதல் உதவிகள் தேவைப்படின் சார்ந்த மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு பிற துறைகளின் பங்களிப்பும் பெறப்படும்.
துணைத் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள 14417 இலவச உதவி மைய எண்ணைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
துணைத் தேர்வு எழுதுவதற்கான முன் தயாரிப்பும் உயர்கல்வித் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கும் பள்ளியளவில் சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டுப் பாட ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்குப் பள்ளி மேலாண்மைக் குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று பல்வேறு நடவடிக்கைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
மோனிஷா
ராகுல் எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்டம் என்ன சொல்கிறது?
டெல்லி பயணம், அமித் ஷாவுடன் சந்திப்பு… அண்ணாமலை பேட்டி!