அம்பேத்கர், திருவள்ளுவரை பற்றி அவதூறாக பேசி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் வி. எச்.பி முன்னாள் நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியன்.
அப்படி என்ன பேசினார்?
சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய வித்யா பவனில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் ஆகியோரை பற்றி அவதூறாக பேசினார்.
திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது என கேள்வி எழுப்பிய ஆர்.பி.வி.எஸ். மணியன், “இவர்தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. திருவள்ளுவர் இருந்தார் என்று சொல்வதும், அவர்தான் திருக்குறளை எழுதினார் என்று சொல்வதும் கற்பனை,
ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும். ராமர் தசரதருக்கு பிறந்தவர் என்று நான் சொல்றேன். ஆனால் திருவள்ளுவருக்கு அப்படி ஏதேனும் இருக்கிறதா. அவரது பெற்றோர் யார் என்று தெரியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதோடு கிறிஸ்துவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என்று விவேகானந்தர் கூறியதாக தெரிவித்தார்.
ராமரை ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்று கூறியிருக்கும் ஆர்.பி.வி.எஸ். மணியன், அரசியல் சாசன சட்டம் தயாரிப்பதற்கான குழுவின் தலைவராக இருந்தவர் ராஜேந்திர பிரசாத். அம்பேத்கர் அந்தக் குழுவில் வரைவுகளை சரி பார்க்கும் கிளார்க் பணியை மட்டுமே செய்தார் என்று அரசியல் சாசன சட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் அம்பேத்கரை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் பேசியுள்ளார்.
இந்தநிலையில் தான் விசிகவினர் அளித்த புகாரின் பேரில் ஆர்.பி.வி.எஸ். மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சென்னை மாம்பலம் போலீசார் இன்று(செப்டம்பர் 14) அதிகாலை, சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று கைது செய்தனர்.
சட்டப்பிரிவு 153, 153(A), 505(a) 505(b), 505(2),SC/ST உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது, நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. எனக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், சிறுநீர் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. என் முதுமையை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும். ஒருவேளை காவல் உறுதி செய்யப்பட்டால் தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று ஆர்.பி.வி.எஸ். மணியன் நீதிபதியிடம் கோரினார்.
இதனைக் கேட்ட நீதிபதி அல்லி, இது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று கூறி செப்டம்பர் 27 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
யார் இந்த ஆர்.பி.வி.எஸ். மணியன் ?
ஆர்.பி.வி.எஸ் மணியனின் முழு பெயர். ஆர். பாலவேங்கட சுப்ரமணியன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில், கல்லூரி படிப்பை முடித்த இவர் தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறையில் வேலையில் சேர்ந்தார்.
ஆனால் சிறு வயது முதலே விவேகானந்தரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.பி.வி.எஸ் மணியன், அரசு வேலையை உதறிவிட்டு முழு நேரமும் விவேகானந்தரின் கருத்துக்களை எடுத்துரைப்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வந்தார்.
திருமணமான இரண்டு மாதத்திலேயே அரசு வேலையை விட்டுவிட்டு வந்த இவர், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கும் பணிக்காக குமரியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் நன்கொடை வசூலித்தார்.
அதுபோன்று மாணவர்கள் மத்தியில் விவேகானந்தரை பற்றி உரையாற்றி வந்துள்ளார்.
டெல்லியில் தொடங்கப்பட்ட விவேகானந்தர் கேந்திரா என்ற அமைப்பு சார்பில் வடகிழக்கு மாநிலங்களில் முகாம்கள் நடத்தப்பட்ட போது, இதில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் விவேகானந்தர் குறித்து உரையாடியிருக்கிறார்.
1980ஆம் ஆண்டு முதல், வி. எச்.பி. அமைப்பின் சார்பில் பேசி வரும் இவர் தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களிலும் இது தொடர்பாக பேசி வருகிறார்.
இது தவிர இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். நெருப்பில் பூத்த நெருஞ்சி மலர் (திரௌபதி), ஹிந்து சமய களஞ்சியம், ஹிந்து வாழ்வியல் சடங்குகள், குரு பக்தி, தீண்டாமைக்கு தீர்வுதான் என்ன?, கலியுகத்தில் கை கொடுக்கும் கடவுள் திருநாமம், ஹிந்துக்களே நாம் எங்கே போகிறோம், வந்தே மாதரம், அர்த்தமுள்ள ஹிந்து தர்மம் போன்ற பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் ஆகியவற்றைப் பற்றியும் யூட்யூபில் விளக்கி பேசி இருக்கிறார்.
அதே சமயம் பல்வேறு நிகழ்வுகளில் இவர் சொற்பொழிவு ஆற்றும் போது பேசிய பேச்சுக்கள் அதிகம் சர்ச்சைகளில் முடிந்து இருக்கின்றன.
வண்ணான் பிள்ளை துணிதான் துவைக்கணும், அம்பட்டன் பிள்ளை முடி வெட்ட கற்றுக் கொண்டால் போதும், பிராமணருக்கு தொண்டு செய்யத் தான் எல்லா சாதிகளும் உள்ளன. இப்படி மேடைக்கு மேடை பேசி சர்ச்சையில் சிக்கியவர் தான் இந்த ஆர்.பி.வி.எஸ் மணியன். இப்போது அம்பேத்கரையும் திருவள்ளுவரையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்துவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என்று சொல்லும் இவர், தனது கல்லூரி படிப்பை கிறித்துவ கல்லூரியான திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
எண்ணூர் தனசேகரன் தற்கொலை மிரட்டல்: பின்னணி இதுதான்!
மகளிர் உரிமை தொகை: ரூ.1000 வரவு வைக்கும் பணி துவக்கம்!