காலையில் ரேஸ்கோர்சில் வாக்கிங்… அப்படியே அன்னபூர்ணாவுக்கு வந்து டிபன்… இதுதான் பெரும்பாலான 60வயதை கடந்த கோவை மக்களின் காலை நேர பணியாக இருக்கும். கோவை மக்களின் உணர்வுடன் கலந்து விட்ட பல உணவகங்களில் அன்னபூர்ணா முக்கியமானது.
அன்னபூர்ணா ஹோட்டல் வளர்ந்த கதையை பார்ப்போம்.
1960 -களில் தாமோதரசாமி நாயுடு தனது சகோதரர்களுடன் சேர்ந்து கென்னடி தியேட்டர் அருகே தள்ளுவண்டி கடையை தொடங்கினார். இதற்கு வீட்டில் இருந்த நகையை 250க்கு அடகு வைத்தும், நண்பரிடம் கடனாக 250 என 500 ரூபாய் திரட்டினார் அவர். தள்ளுவண்டி கடையில் உணவின் டேஸ்ட் சூப்பராக இருக்கவே கூட்டம் அலை மோதியது.
அங்கு, கூட்டம் அலைமோதுவதை பார்த்த கென்னடி தியேட்டர் உரிமையாளர் பால் வின்சென்ட் தனது தியேட்டருக்குள் கேண்டீன் நடத்த தாமோதரசாமி நாயுடுவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். தியேட்டருக்குள் இவர்கள் பில்டர் காபியுடன், கீரை வடை சுட சுட கொடுத்தனர். இதை சாப்பிடவே கென்னடி தியேட்டருக்கு படம் பார்க்க மக்கள் கூட்டம் வந்தது என்றால் மிகையல்ல.
தொடர்ந்து, 1968 ஆம் ஆண்டு ஆர்.எஸ். புரத்தில் ராயல் காபி பார் இருந்த இடத்தில் முதன் முதலில் அன்னபூர்ணா கிளை தொடங்கப்பட்டது. அதன் பிறகு, தாமோதரசாமி நாயுடு முன்னேற்ற பாதையிலேயே சென்றார். கோவையில் பல இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டதால் வியாபாரம் அமோகமாக நடந்தது. அன்னபூர்ணா ஹோட்டலில் பரிமாறப்படும் சாம்பாரை மக்கள் விரும்பி குடிக்கவே தொடங்கினர்.
தினமும் காலை 4 மணிக்கு தாமோதரசாமி நாயுடு சைக்கிளில் தனது ஹோட்டலுக்கு சென்று வேலைகளை துரிதப்படுத்துவார். உணவுகளை ருசி பார்ப்பார். பின்னர், வீட்டுக்கு சென்று விட்டு காரில் மீண்டும் ஆர்.எஸ். புரம் அலுவலகத்துக்கு வருவார். இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை, தனது அலுவலகத்துக்கு தாமோதரசாமி நாயுடு வந்து கொண்டுதான் இருந்தார்.
மிகவும் எளிமையான குணம் கொண்ட அவர், ஊழியர்கள் திருமணத்தில் பங்கேற்பார். கைக்கடிகாரம் அணிந்ததில்லை, ஆனால் நிகழ்ச்சிகளுக்கு சரியான நேரத்துக்கு வருவார். எப்போதும் வெள்ளை கதர் ஆடைதான் அணிந்திருப்பார். இதனால் , கோவையில் அனைவரும் அவரை பெரியவர் என்றே அழைப்பார்கள்.
தற்போது, தமிழகம் முழுவதும் 19 கிளைகளுடன் 3 ஆயிரம் பணியாளர்களுடன் அன்னபூர்ணா வெற்றி நடை போடுகிறது என்றால், அதற்கு விதை போட்டவர் பெரியவர் தாமோதரசாமி நாயுடு. கடந்த 2006 ஆம் ஆண்டு தாமோதரசாமி நாயுடு மறைந்தார்.
அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் சீனிவாசன் ஹோட்டல்களை கவனித்து வருகிறார். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவராகவும் உள்ளார்.
அவர்தான் நேற்று முன்தினம் கோவையில் நடந்த தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
“பன்னுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. ஆனால், பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அதுக்கு 18% ஜி.எஸ்.டி இருக்கிறது. கஸ்டமர் ‘நீங்கள் கிரீமை கொடுங்கள், நாங்களே உள்ளே வைத்துக்கொள்கிறோம்’ என்கிறார்கள். எங்களால் கடை நடத்த முடியவில்லை” என்று கூறினார்.
நிர்மலா சீதாராமனிடம், சீனிவாசன் கேள்வி எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து, நேற்று இரவு முதல் நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வைரலாகி அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கூலி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?- நடிகர் உபேந்திராவின் விசித்திர விளக்கம்!
நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்ப்பாட்டம் அறிவித்த காங்கிரஸ்!
கொள்ளைக்காரன் ஓட்டல்.