பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிப்பது தொடர்பான அறிக்கையை அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜனவரி 7) வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வினை முன்னிட்டு ஜனவரி 20ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
செய்முறை பாடத்திற்கு ரூ.225 எனவும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு ரூ.175 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குனரக இயக்குநர் சேதுராம வர்மா இன்று (ஜனவரி 7) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதேபோல் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எம்.பி.சி, பட்டியல் இன மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பி.சி. மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதே வேளையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் உண்டு எனவும் சுயநிதி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் இயக்க ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
கிறிஸ்டோபர் ஜெமா
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தற்கொலைக்கு முயன்ற 4 பேர் மீது வழக்கு!
“ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை” – ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு