அசைவ உணவு விருந்து என்றாலே எல்லோருக்கும் பிரியாணிதான் சட்டென்று நினைவுக்கு வரும். பிரியாணியையும் தாண்டி ருசியில் பட்டையைக் கிளப்பும் அசைவ உணவுகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பிரதான இடம்பிடிப்பது இந்த வெள்ளை குருமா. சப்பாத்தி, பரோட்டாவுக்கு சைடிஷாக உபயோகப்படும் இந்த வெள்ளை குருமாவை நீங்களும் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
மட்டன் அல்லது சிக்கன் – அரை கிலோ
தயிர் – முக்கால் கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
நறுக்கிய தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 2 அல்லது 3 (காரத்துக்கேற்ப)
பட்டை – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
எண்ணெய் – 5 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – மூன்று சிட்டிகை
எலுமிச்சை – ஒன்று (சாறு எடுக்கவும்)
வெள்ளை மிளகுத்தூள் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்கத் தேவையானவை:
தேங்காய்த்துருவல் – அரை கப்
முந்திரிப்பருப்பு – 10
பாதாம்பருப்பு – 15
எப்படிச் செய்வது?
முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். மட்டன் அல்லது சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்கவும். சிக்கன் சுலபமாக வெந்துவிடும் என்பதால் தனியாக வேகவைக்க வேண்டாம். மட்டனாக இருந்தால் அதை குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
குக்கரில் அல்லது பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிச் சூடாக்கவும். இதில் பட்டை, ஏலக்காய், வேகவைத்த மட்டன் அல்லது சிக்கன் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தயிர், அரைத்த மசாலா, வெள்ளை மிளகுத்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கலவை நன்கு வதங்கி எண்ணெய் மேலே வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பின்னர் கலவையை நன்கு கிளறி கொத்தமல்லி, புதினா இலைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: சத்துகள் வீணாகாமல் கீரைகளை சமைப்பது எப்படி?
கிச்சன் கீர்த்தனா: அரிசி மாவு டேப் சிப்ஸ்