நீங்கள் பூஜை போட வேண்டிய ஆயுதம் எது?

தமிழகம்

கல்வியா செல்வமா வீரமா என்ற பழைய பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? சரஸ்வதி சபதம் படத்தில் கண்ணதாசனின் வரிகளை டி.எம்.சௌந்தர ராஜன் பாடும் தொனி இன்னும் வெண்கலமாய் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நவராத்திரி என்பது வெறும் மூடநம்பிக்கை என்று எடுத்த எடுப்பிலேயே நாம் புறக்கணித்துவிட்டுப் போய்விட முடியாது.

நம் வாழ்க்கைக்கு கல்வியா, செல்வமா, வீரமா என்பதை விவாதிப்பதற்கான ஓர் அரங்கமாகத்தான் இந்த நவராத்திரி திருவிழா காலங்காலமாக நடந்து வருகிறது.

ஆனால் இதைக் கொண்டாடுபவர்களும், நிராகரிப்பவர்களும் சேர்ந்தே இந்த நவராத்திரியின் உள்ளீட்டைப் புரிந்துகொள்ளாமல் வெளியீட்டை மட்டுமே வைத்து எடைபோடுகின்றனர்.

பண்டைய காலத்தில் எதையுமே தத்துவமாக சொன்னால் விட்டுவிடுவார்கள் என்பதால் ஒவ்வொரு தத்துவத்துக்கும் ஒவ்வொரு உருவகத்தைக் கொடுத்தார்கள். கல்வி என்றால் சரஸ்வதி, செல்வம் என்றால் லட்சுமி, வீரம் என்றால் துர்கை ஆகியவைதான் இந்த உருவகங்கள்.

ஒருவன் தன் சுயத்தை உணர்ந்து வாழ்வில் வெற்றியடைய அவனுக்கு கல்வி, செல்வம், வீரம் மூன்றும் தேவை என்பதுதான் நவராத்திரியின் தத்துவம்.

முதல் மூன்று இரவுகள் வீரத்துக்குரிய துர்கை, அடுத்த மூன்று தினங்கள் செல்வத்துக்குரிய லட்சுமியையும், அடுத்த மூன்று தினங்கள் கல்விக்குரிய சரஸ்வதியை வழிபட்டு…. பத்தாவது நாள் உன்னை நீயே வெற்றி கொள் என்பதுதான் விஜய தசமி. அதாவது பத்தாவது நாளாக வரும் வெற்றித் திருநாள்.

பொதுவாகவே நம் புராணங்கள் ஆணாதிக்கத்தை வலியுறுத்துகிறது என்பார்கள். ஆனால் இந்த நவராத்திரியில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று குணங்களுக்கும் உருவகப்படுத்தப்பட்ட மூன்று பேரும் பெண் தெய்வங்கள்.

ஆண் தெய்வங்களால் ஆக முடியாததை பெண்கள் சேர்ந்து செய்து முடிக்கிறார்கள் என்பதுதான் இந்த பத்து நாட்கள் சொல்லும் மெசேஜ்.

இந்தியா முழுதும் தேவி உபாசனை எனப்படும் பெண் தெய்வ வழிபாடுகள் இந்த நவராத்திரியை ஒட்டி வலிமையடைகின்றன.

கல்கத்தாவில் துர்கா பூஜை மிக பிரம்மாண்டமான அளவில் நடக்கும். பத்தாவது நாளில் தான் ஆயுத பூஜை என்று தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் கொண்டாடுகிறார்கள்.

ஆயுதம் என்றால் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் அல்ல. உன் வாழ்க்கையை எதிர்கொள்ள நீ எதை வைத்து போராடுகிறாயோ அதுதான் உனக்கு ஆயுதம் அதாவது உன் கருவி. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்களே அதுதான் இந்த ஆயுதம்.

பேருந்து ஓட்டுவர்களுக்கு பேருந்தே ஆயுதம், ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு ஆட்டோவே ஆயுதம், விவசாயிகளுக்கு தங்கள் ஆடு மாடுகள், கலப்பைகள், டிராக்டர்களே ஆயுதம்,

மாணவர்களுக்கு தங்கள் பாடப் புத்தகங்களே ஆயுதம், பதிப்பாளர்களுக்கு தங்கள் அச்சு இயந்திரமே ஆயுதம் இதுபோல் தங்கள் வாழ்வை எதைக் கொண்டு நகர்த்துகிறார்களே அந்த ஆயுதத்தை வணங்குவது.

அதாவது தனது தொழிலை வணங்குவது என்பதுதான் இதன் உள்ளடக்கம்.

புராணங்களில் உள்ள கதைகள் துர்க்கை அசுரர்களை அழிப்பதாக சொல்லுகின்றன. இதை அப்படியே எடுத்துக் கொண்டால் மூட நம்பிக்கையாகத் தோன்றும்.

அந்த உருவகத்தை தத்துவமாக எடுத்துக் கொண்டால் சிந்திக்கத் தோன்றும். வீரத்தால் தீயதை அழித்து வெற்றி கொள் என்பதுதான் அந்த காட்சியின் உட்பொருள்.

பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி வீரம், செல்வம், கல்வி மூன்றும் வேண்டும் என்பதுதான் இந்த நவராத்திரிக்குள் பொதிந்து கிடக்கும் வெளிச்சம். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது.

எனவே நவராத்திரி எனப்படும் ஒன்பது இரவுகள் பத்தாம் நாளான வெற்றித் திருநாள் எனப்படும் விஜய தசமி என்பதன் உட்பொருள் என்ன அவை கூறும் உண்மை என்னவென்று தெரிந்துகொள்வோம்.

இது ஓர் உளவியல், வாழ்வியல் பண்டிகையாகவே தோன்றியிருக்க வேண்டும். ஆனால் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சேர்ந்து இந்த உளவியலையும் வாழ்வியலையும் மூடி மறைத்துவிட்டன.

கல்வி, செல்வம், வீரத்தைப் பெற்று உங்கள் வாழ்வுக்கான அறிவு உள்ளிட்ட கருவிகளைத் தீட்டுங்கள் என்பதே இந்த நவராத்திரி, ஆயுத பூஜையின் உட்பொருளாகும்.

ஆரா

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: தமிழக அரசு புதிய அறிவிப்பு!

23 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி : வன்முறையில் முடிந்த கால்பந்து போட்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *