சமையலறையில் தவிர்க்க முடியாத உபகரணமான கத்தியை சரியானதாக தேர்வு செய்து வைத்துக்கொண்டால் சமையல் வேலைகள் சுலபமாகும். அந்த வகையில்… “சமையலறை பயன்பாட்டுக்கு பெரும்பாலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்திகளையே தேர்வு செய்ய வேண்டும். அது எளிதில் துருப்பிடிக்காது. இரும்புக் கத்தி எளிதில் துருப்பிடித்துவிடும் என்பதால் அதைத் தவிர்ப்பதே நல்லது.
கத்தியின் கைப்பிடி ஃபைபர் மெட்டீரியலாக இருக்கும்படி வாங்குவது நல்லது. அதன் வாழ்நாள் அதிகமாக இருக்கும். பிளாஸ்டிக் கைப்பிடிகூட ஓகேதான். ஆனால், மரக்கைப்பிடிகள் வைத்தவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றின் இடுக்குகளில் எளிதில் அழுக்கு சேர்ந்து விடும். தவிர, மரக்கைப்பிடியுடன் பொருத்தப்பட்ட ஸ்க்ரூ நாளடைவில் லூஸ் ஆகவும், சமைக்கும் பொருளில் நமக்கே தெரியாமல் விழவும் வாய்ப்பு உண்டு.
கத்தியைத் தேர்வு செய்யும்போது அதன் பிளேடு பகுதி வளையாமல் ஸ்ட்ராங் ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி உறுதியாக இல்லாத கத்தி, வெட்டும்போது நம் கைகளில் காயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கத்தி கனமாக இல்லாமல், லேசாக, மெல்லிய எடையில் இருந்தாலும் இப்படிக் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, சற்று கனமான எடையில் கத்தியைத் தேர்வு செய்ய வேண்டும்.
அனைத்துவித பயன்பாட்டுக்கும் நீங்கள் ஒரே கத்தியைத் தேர்வு செய்ய விரும்பினால் கைப்பிடி இல்லாமல் பிளேடு ஏழரை இன்ச் நீளமும் ஒன்றரை இன்ச் அகலமும் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். இந்த அளவில் இருக்கும் கத்திகள் காயத்தை ஏற்படுத்தாது. தரமான பிராண்டு கத்திகளா என்று பார்த்து வாங்க வேண்டும்.
எந்தக் கத்தியைப் பயன்படுத்தினாலும் அதைச் சரியாகக் கையாளும்போது, கத்தியின் ஆயுளும் நீடிக்கும், வெட்டும் வேலையும் நேர்த்தியாகும்’’ என்கிறார்கள் சமையற்கலைஞர்கள். which knife is the best?