கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்!

Published On:

| By Kavi

சத்குரு

நம்மிடம் யாரேனும் கோபப்பட்டு கத்தினால், நாம் எரிச்சலைடைந்து கத்துவது வழக்கம்தான். இதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள், “கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்” – என்ற அஸ்திரத்தை எடுத்துவிட்டு நம்மை சமாதானப் படுத்துவார்கள்.

அப்படியென்றால் கோபம் ஒரு மேன்மையான குணமா? – இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது…

கோபத்தை ஆதரிக்க இப்படியெல்லாம் கருத்துக்கள் உருவாக்கினாலும் அதை எவ்விதத்திலும் கொண்டாட முடியாது. சினிமாக்களில் கதாநாயகர்கள் சட்டென்று கோபப்படுவதைப் பார்த்து, கோபத்தை ஒரு மேன்மையான சக்தி என்று நினைத்து விட்டீர்களா, என்ன?

உங்களுக்குக் கோபம் எப்போது வருகிறது? நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால், அல்லது மற்றவர்கள் நீங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் தான் கோபம் வருகிறது.

கண்களை மூடுங்கள். உங்கள் மனதை எதன் மீதாவது சில நிமிடங்களுக்கு தொடர்ந்து நிலைநிறுத்த முடிகிறதா என்று பாருங்கள். முடியவில்லை அல்லவா?

உங்கள் மனமே உங்கள் விருப்பத்தை மீறி எங்கெங்கோ அலைபாயும் போது, சுற்றி உள்ளவர்கள் எப்படி உங்களுக்குக் கட்டுப்படுவார்கள்? உங்களைத் தலைவனாக ஏற்று, மற்றவர்கள் எப்போது உங்களுக்குக் கட்டுப்படுவார்கள்? உங்களிடம் இருக்கும் தெளிவும், தொலைநோக்கும் தங்களிடம் இல்லை என்று அவர்கள் நினைத்தால்தானே?

Where there is anger there is character - Sadhguru Article in Tamil

அப்படி அவர்கள் உங்களைத் தலைவனாக ஏற்று, உங்களுக்குக் கட்டுப்பட்டால், அது ஒருவிதத்தில் உங்களுக்குப் பெருமையாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் அதுவே உங்களுக்குச் சுமையாகவும் இருக்கிறது.

சந்தோஷமாக சுமக்கத் தெரியாதவர்களுக்குத் தான், சுலபத்தில் கோபம் வரும். மற்றவர்கள் கருத்துக்கு மாறாக நீங்கள் முடிவு எடுக்கும்போதும், அது அவர்கள் நலனுக்காகத்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி நீங்கள் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், அவர்கள் உங்களுடன் உறுதியாக இணைந்து நிற்பார்கள். தொடர்ந்து ஒத்துழைப்பும் கொடுப்பார்கள்.

ஒரு பறவையை நோக்கி கல்லை விட்டெறிந்தால், சுற்றியுள்ள நூறு பறவைகளும் பறந்து விடும். ஒரே ஒருவரிடம் நீங்கள் கோபத்தைக் காட்டினால் கூட, மற்றவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை போய் விடும். ஏதாவது தவறாகும்போது, உங்களைக் குற்றம் சாட்டிவிட்டு, எல்லோரும் தனித்தனியே உதிர்ந்து போவார்கள்.

தன்னைப் பற்றிய பொறுப்பு ஒருவனுக்கு வந்தால்தான் மற்றவர்களுக்கும் அவன் பொறுப்பேற்று வழிநடத்த முடியும். அதனால், கோபத்தை ஒரு பெருமையான குணமாக நினைக்க வேண்டாம். விரட்டியடிங்கள்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

டிஜிட்டல் திண்ணை: ஆர்.எஸ்.எஸ். வீசிய வலை-உறுதி செய்த அண்ணாமலை: மீண்டும் நிதியமைச்சர்- பிடிஆர் நம்பிக்கை!

அமேசான், ப்ளிப்கார்ட், மீஷோ மீது மத்திய அரசு நடவடிக்கை!

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: அண்ணாமலை ஆதரவு!

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் சால்ட் லஸ்ஸி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share