பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலைவிழா சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த விழாவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார். பிறகு, கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
இதையடுத்து இன்று (ஜனவரி 14) முதல் வருகிற 17-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சென்னை மக்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிராமிய கலைஞர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
சென்னை தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர் லேமேக்ஸ்பள்ளி வளாகம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சென்னை சங்கமம் விழாவில் நாட்டுப்புற பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மேலும் பஞ்சாப்பின் பாங்ரா மற்றும் ஜிந்துவா நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், மணிப்பூரின் லைஹரோபா நடனம், காஷ்மீரின் ரூப் நடனம், பரதநாட்டியம், காவடியாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், மேளம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற ஆடல்- பாடல், வில்லிசை, கையுறை பாவைக்கூத்து, கோல்கால் ஆட்டம், இறை நடனம், தேவராட்டம், கணியான் கூத்து, ஜிம்பளா மேளம், களரி, மெல்லிசை, கட்டைக்கூத்து, நாடகம் உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்படை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு மூலிகை உணவுகள், கடல் உணவுகள், பாரம்பரிய மசாலாவுடன் கூடிய சுவையான கிராமிய உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை நகர மக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலைகளை கண்டுகளிக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: சரும அலர்ஜியைப் போக்க…!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
சண்டே ஸ்பெஷல்: டிரெண்ட் ஆகும் `புத்தா பௌல்’ டயட் – எல்லாருக்கும் ஏற்றதா?