|

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?

நா.மணி

பட்ட மேற்படிப்புகளில் இரு மதிப்பீட்டு ( Double Valuation system) முறை முன்பு அமலில் இருந்தது. ஒரு மதிப்பீடு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மற்றொரு மதிப்பீடு வேறொரு பல்கலைக்கழக பேராசிரியர்களும், மேற்கொள்வார்கள்.

இப்படியான செயல் முறையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு மதிப்பீட்டுப் பணிக்கு சென்றிருந்தேன். நான் பார்த்து, பார்த்து, மதிப்பீட்டு பணியை செய்து கொண்டே இருந்தேன்.

என்னருகில் அமர்ந்திருந்த பேராசிரியர் என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மிக மூத்தவர். எனது மதிப்பீட்டில்,நிறைய மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.

நிறைய மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றனர். நல்ல மதிப்பெண் பெற்று, ஒரு சிலர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். அருகில் அமர்ந்திருந்த பேராசிரியர், கொஞ்சம் தொண்டையை கணைத்தார். என்னிடம் பேசத் தயாராகிறார் என்று புரிந்து கொண்டேன்.

“பேராசிரியர்!” என, என்னை அவர் அழைத்தார். விடைத்தாள் திருத்துவதை நிறுத்திவிட்டு, “என்னங்க சார்?” என்றேன் . “என்ன செய்கிறீர்கள்!” என்றார். அவரது கேள்வியின் அர்த்தத்தை புரிந்தது. “சார்! ஒருவரும் சரியாக எழுதவில்லை” என்றேன். “சரி! எழுதியிருந்தா?” என்று அடுத்த கேள்வியை கேட்டார். சற்று குழப்பமாக இருந்தது. அந்தக் கேள்வி மிகவும் ஆழமானது. சிக்கலானது. இருந்தாலும், பதில் சொன்னேன். “நல்லா எழுதி இருந்தா, நல்ல மார்க் கொடுத்திருக்கலாம் சார்” என்றேன் .

பெயில் போடுவது சரியா?

“நீங்க நல்ல மார்க் கொடுத்திருந்தா?” மீண்டும் கேள்வியால் மடக்கினார். மறுபடியும் ஒரு கேள்வியை கேட்டார். இந்த கேள்விக்கும் என்ன பதில் சொல்வது? என்று மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன். அவரே திரும்பவும் அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தார்.

“நீங்க, 80 மதிப்பெண் கொடுத்த மாணவர்கள் வேலை இல்லாமல் ரோட்ல அலையறாங்க. நீங்க, 40 மார்க் கூட வாங்க லாயக்கில்லை என்று, ஃபெயில் போட்டு, தோற்கடிக்கப்பட்ட மாணவர்கள் பலர் வங்கித் தேர்வு எழுதி, பேங்க்ல கேஷியரா போயிட்டான். இதுக்கு என்ன சொல்றீங்க?” என்றார்.

அவர் சொல்வது, நூற்றுக்கு நூறு சரி என்று புரிந்தது. அதுவரை இப்படி நான் சிந்தித்துப் பார்த்ததேயில்லை. மேலும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தேன். “உண்மையான திறமைக்கும் உங்கள் மதிப்பீட்டு முறைக்கும் உள்ள முரண்பாடு புரிகிறதா பேராசிரியர்” என்றார். ஆம், என்று தலை அசைப்பது தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை‌.

“உங்கள் மதிப்பீட்டு முறை, சரி என்றால் நீங்கள் பாஸ் போடும் மாணவர்கள் மட்டும் தானே, வங்கித் தேர்வு, தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வு, இன்ன பிற தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்?” ஆம் சார் என்று மீண்டும் அவரிடம் சரணாகதி அடைந்தேன்.

இந்தப் பிரச்சினையின் அடுத்த பரிணாமத்திற்கு அவர் சென்றார். “நீங்க, பெயில் போட்ட பசங்க, அல்லது உங்க காலேஜில் பெயிலான பசங்க பட்டியல எடுத்துப் பாருங்க‌. எல்லோரும், அடிப்படையில் ஏழைகளாக இருப்பார்கள். இதுல சில விதிவிலக்குகள் இருக்கலாம். சமூக ரீதியாக பார்த்தால் ,பட்டியல் இன பழங்குடி மக்களாக இருப்பார்கள். பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இவர்கள் மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவு மாணவர்களாக இருப்பார்கள்.

இவர்களைப் பெயிலாக்கி வீட்டுக்கு துரத்தவா வேலைக்கு வந்தீர்கள்?” என்று கேட்டார். உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து, படிக்க வைத்து, ஆளாக்கி, பேராசிரியர் ஆக்கியது இந்த சமூகம். அதற்கு பிரதிபலனாக நீங்கள் செய்யும் காரியமா இது? உங்களைப் போன்றவர்கள் பேராசிரியர்கள் ஆன பிறகு,ஏழை எளிய மாணவர்களை, தொடர்ந்து படிக்க விடாமல், பெயில் ஆக்கி, வீட்டுக்கு அனுப்பி வைக்கிறீர்கள். இது நியாயமா?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டார்.

எனக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. என்ன பேசுவது அவரிடம்? அவர் பேசுவது எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில், அரசு நல விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் சரியாக படிக்க மாட்டார்கள். பட்டப்படிப்பு முடிந்து செல்லும்போது, பலர் பட்டம் வாங்காமலேயே வீடு திரும்பினார்கள். பட்டம் வாங்காமலேயே மகன் வீடு திரும்புகிறான் என்று அந்த ஏழை பெற்றோர்களில் பெரும்பாலானோருக்கு தெரியவே தெரியாது. கட்டணம் கட்டி, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நன்கு படித்தார்கள்.நல்ல மதிப்பெண்கள் எடுத்தார்கள்.

இந்த முரண்பாடு எப்பொழுதும் என் மனதில் உரசி கொண்டே இருந்தது. இப்பொழுது இந்த உரையாடலின் வழியே அல்லது அவரது கிடக்குப்பிடியின் வழியே கொஞ்சம் பொருள் புரிவதாக தெரிந்தது. உடனே அந்த பழைய நினைவுகளை இத்தோடு பொருத்திப் பார்க்கத் தொடங்கியது மனது.

நான் குழம்பி போய் அமர்ந்திருந்ததை பார்த்துவிட்டு,”தம்பி! நான் சுருக்கமாக சொல்லுவது என்னவென்றால், தற்போதைய மதிப்பீட்டு முறைகள் சரியில்லை. நம்மிடம் உள்ள மதிப்பீட்டு யுக்திகள் உண்மையான திறனை மதிப்பீடு செய்வதாக இல்லை. நம்மிடம் குறையை வைத்துக்கொண்டு அல்லது மதிப்பீட்டு முறைகளில் குறைகளை வைத்துக்கொண்டு, மாணவர்களை தண்டிப்பது எந்த வகையில் சரி?” என்பதே எனது கருத்து என்றார்.

பள்ளிகளிலும் இப்படித்தான்

நாம் கல்லூரியில் பார்க்கும் இதே விசயங்களை பள்ளிகளிலும் காண முடியும். பள்ளி செல்லாக் குழந்தைகளை, குழந்தை தொழிலாளர்களை, பள்ளிக்கு அழைத்து வந்து, படிக்க வைக்கிறோம் என்ற பெயரில் அடித்து நொருக்கினார்கள் ஒரு காலத்தில். அவர்கள் அடி பொறுக்க முடியாமல் மீண்டும் விட்ட இடத்தை எட்டிப் பிடித்தனர். பள்ளி இடை நின்றவர்கள் என்று பட்டம் கொடுத்தனர். எல்லோரும் எவ்வளவோ முயற்சி செய்தனர் எனக்குத் தான் படிப்பு வரவில்லை என்று அவர்கள் திருப்பி அடைத்து கொண்டு வாழ்நாள் முழுவதும் உழைத்து தேய்ந்து போக தங்களை தயார் செய்து கொண்டனர். இதனை தடுக்கவே எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வந்தது. இது பாடத்தின் அரசியல் என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அப்போது அது புரியவில்லை.

இப்படிப்பட்ட புரையோடிய மதிப்பீட்டு உத்திகளின் வழியே, போராடிப் போராடி, வெற்றி பெற்ற ஏழைகள் சிலர். வீழ்ந்தவர் பலர். தரத்தின் பெயரால், மதிப்பீட்டு உத்திகளின் குறைபாடுகளை மறந்து போனோம். எல்லோராலும் முடியும் என்று உங்களைப் போன்ற வெற்றி பெற்ற சிலரை வைத்து நம்ப வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். உங்களைப் போன்று வெற்றி பெற்றவர்கள், மேலே வந்து, மற்றவர்களை தொடர்ந்து வீழ்த்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என்று கூறி பெரு மூச்சு விட்டார்.

இந்த சிந்தனைப் போக்கு புதிதாக இருந்தமையால் நமக்கு புதியதாக இருந்ததால்  மூச்சு முட்டியது. குளிரூட்டப்பட்ட அறையில் வியர்த்துக் கொட்டியது. 1990கள் வரை, தமிழகம் எங்கும் அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மட்டுமே இருந்தது. குறைவான எண்ணிக்கையில் கல்லூரிகள்‌.

அதில் படித்த மாணவர்கள், தமிழ் மொழி பாடத்திற்கு கூட , கல்லூரி ஆசிரியர்களிடம், தனி பயிற்சிக்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பெரும்பாலான கல்லூரி பேராசிரியர்கள், தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார்கள்‌. தனிப் பயிற்சியும் பலன் இன்றி பல மாணவர்கள் தோற்றுப் போவார்கள். எவ்வளவு சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இருக்கும் வகுப்பிலும், குறைந்த பட்சம் பத்து விழுக்காடு முதல் முப்பது விழுக்காடு வரை மாணவர்கள் தேர்ச்சியடைந்தால், அதுவே மிகப் பெரிய சாதனையாக பேசப்பட்டது.

கல்லூரி ஆசிரியர் அல்லாதவர் சிலரும் கூட தனிப்பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தார்கள். அதில் சிலர், பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராக இருந்தார்கள். வகுப்புகள் எடுப்பதில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள். எனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்நாளில், ஒரேயொரு முறை தான் தனிப் பயிற்சிக்கு சென்றேன். அதுவும், தனி பயிற்சிக்கு சென்றால்தான் வெற்றி பெற முடியும், என்ற நிலையில் சென்றேன். பொருளாதார மாணவர்களாகிய எங்களுக்கு, அப்போதிருந்த கணக்குப்பதிவியல் பாடங்களுக்கு மட்டுமே. இளநிலை பட்ட வகுப்பில், இரண்டாம் ஆண்டில், இரண்டு பகுதிகளாக அவை

எங்களுக்கு வைக்கப்பட்டிருந்தன. முதல் பகுதியில் , என்னதான் வகுப்பில் கவனித்து, பயிற்சி எடுத்தும், வெற்றி பெற முடியாமல் போனது.

இரண்டாம் பகுதியையும் சேர்த்து, இரண்டுக்குமாக தனி பயிற்சி எடுக்க முடிவு செய்தேன். கல்லூரி பேராசிரியர்களைக் காட்டிலும் நான்கில் ஒரு மடங்கு கட்டணம் பெற்றுக் கொண்டு ஒருவர் தனிப் பயிற்சி நடத்திக் கொண்டிருந்தார். பலரும் அவரிடம் தனிப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தனர் . ‘அலி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், முகமது அலி சாரிடம் தனிப் பயிற்சி எடுக்க சென்றோம். அலி சார், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு எழுத்தராக பணியாற்றிக் கொண்டிருந்தார். வேட்டி தான் கட்டுவார்.

வேலை முடிந்து, மாலை 6 மணிக்கு பயிற்சி மையத்துக்கு வந்து, இரவு 9 ,10 மணி வரை கூட பயிற்சி வகுப்புகளை எடுப்பார். பி .காம், எம்.காம், ஐசிடள்யூ ஏ, சிஏஐஐபி என பல பட்டப் படிப்புகளுக்கு வகுப்புகள் எடுப்பதில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கினார். கரும்பலகை இடத்து நின்று கொண்டு, அப்பொழுது மிகப் பிரசித்தி பெற்று விளங்கிய கணக்குப்பதிவியல் புத்தகத்தை ( Advanced Accountancy by Batliboi) ஒரு மாணவனை புரட்டச் சொல்வார்.

அங்கிருந்து கொண்டே, இன்னும் கொஞ்சம் திருப்பு, இன்னும் கொஞ்சம் திருப்பு. ம் ம் ம் அந்தப் பக்கம், ம் அதான். நிறுத்து. படி, என்பார். அவர் சொன்ன கணக்கு மிகச் சரியாக அந்தப் பக்கத்தில் இருக்கும். தலையணை போன்ற பெரிய புத்தகத்தில், பத்தடி தூரத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு பக்கத்திலும் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து வைத்த ஆசிரியராக அவர் இருந்தார்.

தீராத கணக்கு பாடங்களுக்கும், விடை கிடைக்காத கணக்குகளுக்கும், அவர் மிக சரியான விடைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். “அக்கவுண்டன்சில என்னையா இருக்கு? ஒரு என்ட்ரிய ரெண்டு இடத்துல போடு. தானே கணக்கு சால்வாகும்” என்பார். சில மாணவர்கள் ஆச்சரியப்பட்டு, “சார்! சார்! நீங்க என்ன சார் படிச்சு இருக்கீங்க?” என்பார்கள். “நான் என்னய்யா பத்தாவது படிச்சிருக்கேன்” என்பார்.

அவர் உண்மையில் என்ன படித்திருந்தார்? எப்படி இவ்வளவு திறன் மிக்கவராக இருக்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது. அவருக்கு கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விதிப்படியான பேராசிரியர் தகுதி பெற்றிருந்தாரா என்பதும் தெரியவில்லை.

உலகமயமாதலின் விளைவாக, கல்லூரிகளின் எண்ணிக்கை செங்குத்தாக உயர்ந்தது. இப்படி உருவான ஆகப்பெரும்பான்மை கல்லூரிகள் தனியார் கல்லூரிகள். 12 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களில் நூற்றுக்கு 50 பேருக்கு மேல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி விகிதம் 90 விழுக்காட்டை தாண்டி விட்டது. தேர்ச்சி விகிதம் நூறாகவிருக்கிறது. எந்த ஒரு மாணவனும் தனி பயிற்சிக்கு செல்வதில்லை. படிக்கக் கிடைத்த வாய்ப்பும் திறனும் பன்மடங்கு உயர்ந்து விட்டதா? முப்பது வருடங்களுக்கு முன்னர் சராசரி தேர்ச்சி விழுக்காடு, 10 முதல் 30 விழுக்காடாக இருந்தது . இன்று 90 விழுக்காடு எப்படி சாத்தியம்?
அடுத்த வாரம் காண்போம்.

கட்டுரையாளர் குறிப்பு

நா.மணி

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? – ரஜினி விளக்கம்!

கிரிமினலுடன் ரஜினி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts