உடல் எடையைத் தக்கவைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு பிடித்த ஓர் உணவு ஓட்ஸ். அதில் விதம் விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பலருக்கு தெரியாது. அபரிமிதமான ஊட்டச்சத்துகள் கொண்ட ஓட்ஸில் கோதுமை சேர்த்து வித்தியாசமாக சமைத்து இந்த வார வீக் எண்டை ஸ்பெஷலாக்குங்கள். நார்ச்சத்துக்கள் மிகுந்த இந்த தோசையின் சுவையும் அலாதியாக இருக்கும். கொழுப்பைக் கட்டுப்படுத்தும். புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அனைவருக்கும் ஏற்ற உணவு.
என்ன தேவை?
கோதுமை மாவு – அரை கப்
ஓட்ஸ் – அரை கப்
உப்பு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸி இருந்தால் ஓட்ஸைப் போட்டுப் பொடித்துக்கொள்ளவும். இல்லை எனில், அப்படியே உபயோகப்படுத்தலாம். கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். அதோடு ஓட்ஸைக் கலந்து, அந்த மாவில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டுக் கலந்து, தோசைகளாக வார்த்துஎடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…