கிச்சன் கீர்த்தனா: கோதுமை பொரி – ஓட்ஸ் பேல்

Published On:

| By Minnambalam

நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம் என்றாலும்,

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் அனைவருக்கும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் வரும்முன் காப்போம் என்கிற ரீதியில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இந்த கோதுமை பொரி – ஓட்ஸ் பேல் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

என்ன தேவை?

பொரியும் வரை வறுத்த கோதுமை – ஒரு கப்
வறுத்த ஓட்ஸ் – அரை கப்
கார்ன்ஃப்ளேக்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
வெள்ளரிக்காய் (சிறியது) – ஒன்று
வேகவைத்த சிறிய உருளைக்கிழங்கு – ஒன்று
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
கிரீன் சட்னி – ஒரு டீஸ்பூன்
ஸ்வீட் சட்னி – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
எலுமிச்சம்பழச் சாறு – அரை டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, வெள்ளரி, உருளைக்கிழங்கு, மல்லித்தழை… எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வறுத்த கோதுமை, ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், மல்லித்தழை தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.

சாப்பிடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு, ஓட்ஸையும் கோதுமை பொரியையும் சேர்க்கவும். மல்லித்தழை, கார்ன்ஃப்ளேக்ஸ் தூவி பரிமாறவும்.

குறிப்பு: சிறிது மல்லித்தழை, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்தால் கிரீன் சட்னி கிடைக்கும். ஒரு சுளை புளியுடன், சிறிது வெல்லம் சேர்த்து அரைத்தால் ஸ்வீட் சட்னி கிடைக்கும்.

வேர்க்கடலை – முளைப்பயறு சாலட்

கிச்சன் கீர்த்தனா : கோதுமை பக்கோடா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share