கொள்முதல் நிலையங்களில் மலை போன்று குவியும் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் குடோன்களுக்கு எடுத்துச்சென்று பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், விவசாயிகள் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் மதுரை கிழக்கு மேற்கு வட்டங்களில் தற்போது, அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில்,100-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
நெல் அறுவடை தொடங்கிய நிலையில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் மூட்டைகளை பெறும் கொள்முதல் நிலையங்கள் லாரிகள் மூலம் நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் பாதுகாப்பாக வைக்காமல் திறந்த வெளியில் நீண்ட நாளாக பாதுகாப்பற்ற சூழலில் வைத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனரின் எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தியாக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. WhatsApp number for complaints
விவசாயிகள் தங்கள் புகார்களை 9445257000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொலியோ இருந்தால் அதையும் பதிவிடலாம் என மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.