மகளிர் ஆணையத்தின் தலைவியே இப்படி ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை பொதுவெளியில் இளம் பெண்களுக்கு அறிவுறுத்துவது சரியா என்று குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் கா.கணேசன் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கருத்தரங்கம் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி,”மாணவிகள் வாட்சப் டிபி யில் புகைப்படங்களை வைக்க வேண்டாம். அந்தப் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள். தொழில் நுட்பத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது. அதனை எப்படி கையாள வேண்டும் என்பது முக்கியம்” என்று கூறினார்.
இவரது இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் இவரது கருத்தை விமர்சனம் செய்தும் இந்த கருத்தை அவர் வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ”ஒரு மகளிர் ஆணையத்தின் தலைவியே இப்படி ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை பொதுவெளியில் இளம் பெண்களுக்கு அறிவுறுத்துவது சரியா என குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் கா.கணேசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மகளிர் ஆணைய தலைவி குமாரிக்கு குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் கா.கணேசன் இன்று (ஜூன் 29) அனுப்பியுள்ள கடிதத்தில், “ இன்னும் எத்தனை ஆண்டுகள் பெண்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து ஒளிந்து வாழ வேண்டும்???
கல்லூரி மாணவிகள் DPயில் தங்கள் ஒளிப்படங்களை வைக்கவேண்டாம் என்று தாங்கள் தெரிவித்துள்ள கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன் என்பதை விட ஒரு மகளிர் ஆணையத்தின் தலைவரே இப்படி ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை பொதுவெளியில் இளம் பெண்களுக்கு அறிவுறுத்துவது சரியா? என்கிற கேள்வியை முன் வைக்கிறேன்.
பெண்கள் 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது.. இந்த உடையைத் தான் அணிந்து செல்ல வேண்டும்?.. அந்த மூன்று நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது.. பசங்களோடு பேசக் கூடாது.. இப்பட்டியல் இன்னும் நீளும். இந்தப் பட்டியலில் இனி இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? என்ற கேள்வியே முன்னெழுகிறது.
மதிப்புமிகு தலைவர் அவர்கள் சொல்வதுபோல் நம் சமூகத்தில் கல்லூரி செல்லும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகள் அதிகம். இன்னும் குறிப்பாக பாலியல் ரீதியான பிரச்சனைகள் மிக அதிகம். இன்றைக்கு எல்லோரும் மொபைல் போன் கையாளத் தொடங்கிவிட்டார்கள், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் அதிகம். அதற்காக, இப்போது dpயில் போட்டோ வேண்டாம் என்று சொல்லி… பின்னர் மொபைல் போனே வேண்டாம் என்று சொல்லி, பிறகு படிக்கவே போக வேண்டாம் என்று சொல்லி, இறுதியாக வீட்டைவிட்டே வெளியே செல்ல வேண்டாம் என்று சொல்லி…. போதும்… தயவுசெய்து நிறுத்துங்கள் மேடம்.
இந்தியாவிலேயே நம் தமிழகம் தான் பிற்போக்குத்தனங்களுக்கு சவக்குழி தோண்டிய மண். சமூக நீதியும், சமத்துவமும் உயர்த்திப் பிடிக்கும் மண். இந்த மண்ணில் இருந்து நாம் செய்ய வேண்டியது எதுவாக இருக்க வேண்டும்?
இளம் பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதும், அவர்களை அதிகாரப்படுத்துவதுமே முதன்மையானது. தனக்கு ஒரு பாதிப்பு நேரிட்டால், அதனை எதிர்கொள்ளும் மன வலிமையை அவர்களுக்கு ஏற்படுத்துவது தான் ஒரு மகளிர் ஆணையத்தின் செயலாக இருக்க முடியும்.
DPயில் வைக்கப்பட்ட தனது ஒளிப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டு அதன் மூலம் பாதிப்பு நேர்ந்தால், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான தன்னம்பிக்கைப் பயிற்சியை, அது குறித்த விழிப்புணர்வைத் தான் மகளிர் ஆணையம் கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
எவ்வளவு கேவலமாக மார்பிங் செய்யப்பட்டிருந்தாலும், அவை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டிருந்தாலும். “அது குறித்து அவமானம் கொள்ள வேண்டியவர் நானல்ல, அதைச் செய்தவன் தான்” என்று அதை நெஞ்சுறுதியோடு புறம்தள்ளிவிட்டு அதிலிருந்து விடுபட்டுச் செல்லும் மன ஆற்றலை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது தான் மகளிர் ஆணையத்தின் பணியாக இருக்க முடியும்.
இதுபோன்ற குற்றச்செயல்களைச் செய்யும் வன்கொடுமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தரும் பணியையும் ஆணையம் செய்திட வேண்டும்.
குற்றவாளிகளை கண்டிக்க வேண்டிய, எச்சரிக்க வேண்டிய ஆணையம், பாதிப்பிற்குள்ளாகும் எளிய பெண்களுக்கு, கல்லூரி மாணவிகளுக்கு இவ்வாறு அறிவுரை வழங்குவது சரிதானா மேடம்? ஆணையம் தனது கருத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்