சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகளை வழங்க காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வழக்கு
2024 ஜூலை 4 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைதாகி இருக்கும் நிலையில் தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று (ஜனவரி 27) விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசு சார்பில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் உயர்நீதிமன்றத்திற்குள் வருபவர்களை சோதனை செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு எதுவும் கொண்டுவரப்படவில்லை என்றும் அது தவறான தகவல் என்றும் வாதிடப்பட்டது.
வெடிகுண்டு வெடித்திருந்தால்…
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும், வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆலோசனைகளை வழங்குமாறு காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு வெடித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இது அனைவருடைய பாதுகாப்பு சம்பந்தமானது என்று கூறிய நீதிபதிகள், “வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே நீதிமன்றத்துக்கு வர வேண்டும். கடைசி நேரத்தில் நீங்கள் வந்தால், சோதனை செய்யும் போது எரிச்சல் அடைவீர்கள்.
அதற்காக ஏர்போர்ட்டில் நடத்தப்படுவது போல் சோதனை செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் சில நியாயமான சோதனை இருக்க வேண்டும். அதை எதிர்க்க முடியாது.
அனைத்து சோதனைகளும் சில அச்சங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை” என்று வாய்மொழியாக கூறினர்.