காய்ச்சல், சளி, இருமலாகட்டும்; வயிற்று உபாதைகளாகட்டும்; வேறு பிரச்னைகளாகட்டும்… உடல்நலம் சரியில்லாதபோதும் மன அழுத்தம் அதிகமாக உள்ள நிலையிலும் பெரும்பாலும் பலருக்கும் எதுவுமே சாப்பிடப் பிடிக்காது.
`தண்ணிகூட குடிக்க முடியலை…. வாய்க்கு எதுவுமே பிடிக்கலை…’ என அதற்குக் காரணமும் சொல்வார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் எதையும் சாப்பிடாமல், தண்ணீர்கூடக் குடிக்காமல் இருப்பதால் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, ஆற்றல் வெகுவாகக் குறையும். இதனால் உடல்நலம் பாதிக்கப்படும். இதற்கு தீர்வு என்ன?
“உடலும் மனதும் சரியில்லாதபோது குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்கவில்லை என்பவர்கள், க்ளியர் வெஜிடபுள் சூப், எலும்பு சூப், சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ், நீர்ச்சத்து அதிகமுள்ள பழ ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற திரவ உணவுகள் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்வதோடு, இவற்றில் கலோரி குறைவு என்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலுக்குப் பயன்படும். ரசம், சீரகத் தண்ணீர், மூலிகைகள் சேர்த்த குடிநீர் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து, செரிப்பதற்கு எளிமையான, அதேநேரம் உடனடி ஆற்றலைக் கொடுக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடலாம். உதாரணத்துக்கு இட்லி, இடியாப்பம், வெள்ளை அவல், சாதம், பிரெட் மற்றும் கஞ்சி போன்றவை.
உணவை வெறுக்கும் நேரத்திலும் மற்ற நாட்களைப் போலவே உடலுக்கு புரதச்சத்து முக்கியமாகிறது. அதற்கு முட்டை, எலும்பு வேகவைத்த சாறு, பருப்பு சூப், பருப்பு ரசம், சாதம் மற்றும் இட்லியுடன் நீர்க்கத் தயாரித்த பருப்பு போன்றவை புரதத் தேவையைப் பூர்த்தி செய்யும்.
மஞ்சள், பட்டை, ஏலக்காய் போன்றவற்றை சமையலில் பயன்படுத்துவது சிறந்தது. தினமும் முடியாதபோது, உணவை வெறுக்கும் நாட்களிலாவது பயன்படுத்தலாம்.
இவை செல் பாதிப்பை சரி செய்யும். துளசி இலைகளை வெறும் தண்ணீரில் போட்டுவைத்து அல்லது டீ தயாரிக்கும்போது சேர்த்துக் குடிக்கலாம்.
சாப்பிட பிடிக்காத நாட்களில் செரிமானம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த வகையில் எண்ணெயில் பொரித்த உணவுகளும் காரமான உணவுகளும் செரிமானத்தை பாதிக்கும் என்பதால் அவை தவிர்க்கப்பட வேண்டியவை.
அதிக எண்ணெயும் மசாலாவும் சேர்க்காமல் சமைக்கப்பட்ட உணவுகளே சிறந்தவை. வயிறு தொடர்பான பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் இந்த உணவுகள் உதவும்.
மற்ற நாள்களைவிட உடல்நலமில்லாத நாள்களில்தான் உடலுக்கு ஆற்றல் அதிகம் தேவை. அதற்கு சரியான, சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்” என்கிறார்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
“அண்ணாமலை மட்டும்தான் நாட்டுக்காக உழைக்க பிறந்தவரா”: கே.பி.முனுசாமி
சிஏபிஎஃப் தேர்வு: போராட்டம் அறிவித்த திமுக – முடிவை மாற்றிய அமித்ஷா
பிச்சைக்காரன் 2: விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு சிக்கல்!