எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது’ – இந்தப் புலம்பலை அநேகமாக பலரிடமும் கேட்கலாம். செரிமானமின்மை, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது.
கல்லைத் தின்றாலும் கரையும் வயதில் இருக்கும் இளவயதினருக்கும் இன்று இந்தப் பிரச்சினைகளில் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டவையோ இருப்பதைப் பார்க்கிறோம். இதற்கான தீர்வு என்ன?
“இதற்கெல்லாம் முதன்மை காரணம் குடல் ஆரோக்கியமின்மையே. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களை மக்கள் மறந்துவிட்டதுதான்” என்கிறார்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
மேலும், “நம் உடலில் நல்ல பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்டுகள் இயற்கையாகவே இருக்கும். இந்தக் கூட்டணியை புரோபயாட்டிக்ஸ் என்கிறோம். நல்ல பாக்டீரியாவோடு, கெட்ட பாக்டீரியாவும் நம் உடலில் இருக்கும். நோய்த்தொற்று ஏற்படும்போது, அதிக அளவிலான கெட்ட பாக்டீரியா கிருமிகள் ஒன்று சேர்ந்து நம் உடல் அமைப்பின் சமநிலையை பாதிக்கும்.
அந்த நிலையில் நல்ல பாக்டீரியா உதவிக்கு ஓடோடி வந்து, உடலின் சமநிலையைத் திரும்பப் பெற வைப்பதுதான் புரோபயாட்டிக்ஸின் பிரதான பணி.
அது மட்டுமா… வயிற்றுப்போக்கைத் தடுப்பது, பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுவலியைப் போக்குவது, பற்கள் தொடர்பான நோய்களுக்கு மருந்தாவது, பெருங்குடல் புண்களை ஆற்றுவது எனக் கூடுதல் பலன்களையும் தருகிறது.
இத்தகைய அற்புத பலன்களைக் கொடுக்கும் புரோபயாட்டிக்ஸ் தயிர், எண்ணெய், காரம் சேர்க்காத ஊறுகாயிலும், சோயா உணவுகளிலும் அதிகமிருக்கிறது.
அடுத்தது, புரோபயாட்டிக்ஸுக்கு நெருங்கிய சொந்தமான ப்ரீபயாட்டிக்ஸ். அதாவது நம் குடலுக்கு நன்மை செய்கிற பாக்டீரியாவுக்கு உணவாகும் ஒருவகை நார்ச்சத்துதான் இது.
குடல் செல்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உற்பத்தி செய்ய உதவுபவை இவை. அதன் விளைவாக நம் செரிமான இயக்கம் ஆரோக்கியமாக இருக்கும்.
இவற்றிலுள்ள கொழுப்பு அமிலங்கள் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, வளர்சிதை மாற்ற ஆரோக்கியமும் மறைமுகமாக மேம்படுகிறது.
பெருங்குடல் புற்றுநோய் மற்றும் குடல் அழற்சி நோய் ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதில் ப்ரீபயாட்டிக்ஸுக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஊட்டச்சத்துகளை உடல் சரியாக கிரகித்துக்கொள்வது, உடல் பருமனைத் தடுப்பது, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தருவது என ப்ரீபயாட்டிக்ஸுக்கு வேறு பலன்களும் உண்டு.
வெங்காயம், பூண்டு, பனங்கிழங்கு, பார்லி, ஓட்ஸ், ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் ப்ரீபயாட்டிக்ஸ் அதிகம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த துரித உணவுகளையும் காரமான உணவுகளையும் தவிருங்கள். இதைவிட எளிய வழி வேறு இல்லை” என்கிறார்கள்.
“குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது” – ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி
“ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு?” – ஆ.ராசா கேள்வி!