சத்குரு
புதிய மனிதரைச் சந்திக்கும்போது ஏற்படும் பதற்றத்தை ஒருவர் எப்படி எதிர்கொள்வது என்று ஒரு மாணவர் சத்குருவிடம் கேட்கிறார்.
கேள்வி : யாரை சந்தித்தாலும் அவர்களிடம் பேச, பழக நான் மிகவும் பதற்றமாக உணர்கிறேன். இது மனரீதியான பிரச்சினையா அல்லது சமூகத்தில் என்னால் பொருந்த முடியவில்லையா? நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்
நீங்கள் நிச்சயமாக யோகா என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருப்பீர்கள். யோகா என்ற வார்த்தையை கேட்டதுமே, தங்கள் உடலைப் பலவிதமாக முறுக்கிக்கொள்வது என்று மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். இப்போது உங்கள் வாழ்க்கை அனுபவத்தில், நீங்கள் மற்றும் இந்த உலகம் என இரண்டாக இருக்கிறது.
ஆகவே, நீங்கள் தனியாகவும், உங்களுக்கு எதிரணியில் இந்த மொத்த பிரபஞ்சமும் இருக்கிறது. நீங்களும், பிரபஞ்சமும் எதிர் அணிகளாக இருப்பதென்பது ஒரு மோசமான போட்டிக்களம். இந்தப் போட்டியில் நீங்கள் வெல்வதற்கான வாய்ப்பு ஏதாவது உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பிரபஞ்சத்துடன் போட்டியிடாதீர்கள்.
இதன் காரணமாகவே, யோகா என்ற வழிமுறையை நாம் கண்டுபிடித்தோம். யோகா அல்லது ஒன்றிணைதல் என்றால் நீங்கள் உங்களது தனிதன்மையின் எல்லைகளை விழிப்புணர்வுடன் அழிப்பது. அதனால் நீங்களும், பிரபஞ்சமும் வெவ்வேறானவை என்பது போல் இல்லாமல், அது ஒன்று போல உணர்வது. நீங்கள் சற்றே யோகப் பயிற்சி செய்ய வேண்டும் இல்லையென்றால், எல்லாவிதமான கருத்துக்கள், உணர்ச்சிகள் மற்றும் சிந்தனைகளால் உங்கள் மனம் புரண்டுபோகும்.
உங்கள் மனதைச் சற்றே திறந்த நிலையில் வைத்தால், உங்கள் தனித்தன்மையின் எல்லைகளை நீங்கள் அழித்துவிட்டால், இது மிக எளிதாகிறது ஏனென்றால் எந்தச் சூழலிலும் உங்களுக்கு அருகில் இருப்பவரையும் உங்களில் ஒரு பாகமாக நீங்கள் உணர்கிறீர்கள். அது ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ, குழந்தையாகவோ அல்லது ஒரு மிருகமாகவோ இருந்தாலும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
உங்கள் எல்லைகளை நீங்கள் நீக்கிவிட்டதால் எல்லாவற்றுடனும் முழுமையாக நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் உங்கள் எல்லைகளை நீங்கள் பலப்படுத்திக்கொள்ளும்போது மட்டும்தான் உங்களுக்கு எப்போதும் ஒரு பிரச்சனை இருக்கும். அது ஆணாக இருந்தால் ஒருவிதமான பிரச்சனை எழுகிறது, பெண்ணாக இருந்தால் வேறொருவிதமான பிரச்சனை எழுகிறது.
மற்றவர்களுடன் மட்டுமின்றி , வாழ்க்கையுடனும் இயல்பாக இருப்பதற்குத் தேவையான செயல் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் வாழ்வில் என்னவாக இருக்கிறீர்களோ அதில் இயல்பாக இருக்க வேண்டும். நீங்கள் இயல்புத்தன்மையில் இல்லையென்றால் உங்களின் முழுத் திறனையும் உங்களால் உணரவே முடியாது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆனால் 99 சதவீகித மக்கள் தங்களுக்குள் இருக்கும் அந்த புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தாமலேயே வாழ்ந்து இறந்து விடுகிறார்கள். அந்த புத்திசாலித்தனம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், உங்களுக்குள் இருக்கும் முழுத்திறனும் வெளிப்பட வேண்டுமானால் உங்கள் வாழ்க்கை இயல்புத்தன்மைக்கு வர வேண்டும்.
உங்களது உடல், இரசாயனம், மனரீதியான மாறுபாடுகள் மற்றும் சக்தி நிலைகளை எப்படிக் கையாள்வது என்பதற்கு யோகா என்று அழைக்கப்படுகின்ற ஒரு முழுமையான விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் உள்ளது. இதனை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு நீங்கள் கொண்டுவந்தால், யார் வந்தாலும், நீங்கள் சம நிலையில் இருக்கமுடியும். பதற்றமான நிலையில், எல்லாமே மாறுபாடாக இருக்கிறது. ஆகவே, இயல்பு நிலையில் இருப்பது மிக முக்கியமானது, இல்லையென்றால் வாழ்வை அது எப்படி உள்ளதோ அந்தவிதமாக நீங்கள் உணரமாட்டீர்கள்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபாவளி விற்பனையில் வங்கதேச ஆடைகள்: திருப்பூர் பின்னலாடைக்குப் புதிய சிக்கல்!
பியூட்டி டிப்ஸ்: மருக்களை எப்படி நீக்கலாம்?