நெருங்கும் தீபாவளி… பட்டாசு கடை அமைக்க என்ன செய்ய வேண்டும்?
நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி இந்தாண்டும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமத்தை பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வருகின்ற 31.10.2024 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் வரும் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில் அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனுமதியின்றி உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு… மீண்டும் சம்பவம் செய்த போலீஸ்!
மதுரையில் ரூ.1 கோடியில் மீன் மார்க்கெட்: பணிகள் தீவிரம்!