விநாயகர் சிலை ஊர்வலங்களால் என்ன பயன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி ஊர்வலம் செல்வதற்காக தமிழ்நாடு முழுதும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் மற்றும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 13 இடங்களிலும், கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலங்களுக்கும் அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த மனு காவல்துறையினரால் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்தும், விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (செப்டம்பர் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், “தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது உள்ளூர் போலீஸார் முடிவெடுக்கிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
இதனை கேட்ட நீதிபதி, தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தால் அதனை ஏற்க முடியாது என்று மனுக்களை முடித்து வைத்தார்.
மேலும், “விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன்? சிலை வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லும்படி விநாயகர் கேட்காத நிலையில் கொண்டாட்டங்களால் என்ன பயன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் எனது சொந்த கருத்து” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புகளை மறு ஆய்வுக்கு தாமாக முன் வந்து எடுத்து, அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் என்பது நினைவுகூறத் தக்கது.
மோனிஷா
Asia Cup: வரலாற்று சாதனை படைத்த ஜடேஜா
காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டமா? -அமைச்சர் துரைமுருகன் பதில்!