மதுரை சம்பவம் : குட்கா வழக்குகளின் நிலை என்ன?

தமிழகம்

மதுரையில் பெட்டிக் கடை உரிமையாளர் ஒருவர் 20 முறை குட்கா வழக்கில் சிக்கி மீண்டும் தற்போது குட்கா விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு கூறுகிறார்.

ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை பகுதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும், கிலோ கணக்கில் கஞ்சா குட்கா ஆகியவை பறிமுதல் செய்வதாகவும் காவல் துறை கூறுகிறது.

ஆனால் தமிழகத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை சர்வ சாதாரணமாக நடக்கிறது என்பது மதுரையில் நடந்த சம்பவம் மூலம் தெரியவருகிறது.

மதுரை, மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியில் தொடர்ந்து கணேஷ் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பெயரில் மதிச்சியம் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையில் போலீசார், திடீரென ராமராயர் மண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த ரஞ்சித் ஸ்டோர்ஸ் எனும் பெட்டிக்கடையில் சோதனையிட்டனர்.

போலீசாரின் சோதனையில் அந்த கடையில் கணேஷ் புகையிலை பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கடையின் உரிமையாளர் மகாதேவனை கைது செய்த போலீசார், உடனடியாக அந்த கடைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரை வரவழைத்து சீல் வைத்தனர்.

அதோடு அந்தப் பகுதியில் உள்ள சிறிய சிறிய மளிகைக் கடைகளுக்கும் போலீசார் நேரில் சென்று குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

ரஞ்சித் ஸ்டோர் உரிமையாளர் மகாதேவன் மீது ஏற்கனவே மதிச்சியம் காவல் நிலையத்தில் இதுவரை 20 குட்கா வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

அப்படியானால் தற்போது 21 முறையாக போலீசாரிடம் சிக்கியுள்ளார் மகாதேவன் .

இத்தனை முறை போலீசாரிடம் சிக்கியும் மீண்டும் மீண்டும் அவர் குட்கா விற்பனையில் ஈடுபடுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

குறிப்பாக குட்கா வழக்குகளின் நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

முன்னதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் போதைப் பொருள் தடுப்பில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

இளைஞர்களுக்கு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி கைது – அதிமுக கூட்டணியை புதுப்பித்த ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.