நமக்கு ஏற்ற உணவு எது?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

ஆரோக்கியமாக இருக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை…

மனிதன் மேல் நிலைக்குச் செல்ல முற்படும்போது, அவன் உணர்வுக்கு பெரிய உறுதுணையாக இருக்கிற கருவி உடல், உடலைப் பேணிப் பாதுகாத்தல் என்பது, ஆன்ம வளர்ச்சிக்கான அடிப்படைகளில் ஒன்று.

ஆரோக்கியம் என்பது இலட்சியமா?

மேலை நாடுகளைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது ஏதோ அடைய வேண்டிய விஷயம் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் ஆரோக்கியம் நமக்குள்ளிருந்து இயல்பாக, எழுவது. அமெரிக்கர்கள் சிலர் தங்கள் ஊட்டச் சத்துக்கும், உற்சாகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மாத்திரைகளை நம்பி வாழ்க்கை நடத்துவதை நாம் பார்க்கிறோம்.

காலை, மதியம், இரவு உணவுகளில் வைட்டமின் மாத்திரைகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனால், அதையே சரி என்று இந்தியர்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அமெரிக்க நாட்டில் வசிக்கிற, ஏராளமான இந்தியர்கள் நன்கு பணிபுரிகிறார்கள். வெற்றிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் மாத்திரைகளை நம்பி வாழ்பவர்கள் இல்லை.

எனவே, மூன்று விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, மனித உடலமைப்புக்கு ஏற்ற உணவு எது? இரண்டாவது பிராண சக்தியை எடுக்கிற உணவு எது? பிராண சக்தியை தரவோ, பெறவோ செய்யாத சராசரி உணவு எது? மூன்றாவது, சமைத்த உணவு நல்லதா? பச்சைக் காய்கறிகள் நல்லதா? இவையெல்லாம் இன்றும் கூட விவாதத்திற்கு உரியவையாகவே விளங்குகின்றன.

பொதுவாக, யோகம், தியானம் போன்ற துறைகளில் போகிறவர்கள் “நாங்களெல்லாம் பச்சைக்காய்கறிகள் தான் சாப்பிடுகிறோம்” என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் பெருமை அடைவதும் உண்டு. ஆனால், முழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது.

பச்சைக் காய்கறிகள், தானியங்கள் போன்றவை உங்கள் உடலுக்கு வேண்டிய சக்திகளை முழுமையாகத் தருபவை. அவற்றை உங்கள் உணவில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாளொன்றுக்கு 1000 கிராம் உணவு உட்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 700 கிராம் சமைத்த உணவு, 300 கிராம் காய்கறிகள், மற்ற தானியங்களை பச்சையாக உட்கொள்ளுதல் என்றிருந்தால் அதிலே பயன் இருக்கும்.

What is the right food for us

பலபேர் வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு அதற்கு மேல் பழங்கள், காய்கறிகள் என்று சாப்பிடுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் இருக்காது. உணவை உட்கொள்கிற அளவைக் குறைப்பது பொதுவாகவே நல்லது. 100% சமைத்த உணவு சாப்பிடுகிற நீங்கள் அதை 70% குறைத்து 30% பச்சைக் காய்கறிகள் சாப்பிடாமல் இருந்தால் கூட, அந்த 30% உணவு குறைகிறபோது, உங்கள் உடல் நலம் முன்னேற்றம் அடைவதைக் காண்பீர்கள். முடிந்தால் இரவு உணவு மட்டும் 100% பச்சைக்காய்கறிகளாக, தானியங்களாக சாப்பிடுவது நல்லது. அதில் பழங்கள் சாப்பிடுவதே ஒரு தனிக்கலை.

சிலபேர் உணவு சாப்பிட்டதும் பழங்கள் சாப்பிடுகிறார்கள். பழங்கள் விரைவில் செரித்துவிடும். சமைத்த உணவு செரிப்பதற்கு தாமதமாகும். எனவே செரிமான முறையில் ஒரு சிறு குழப்பம் ஏற்படும். அத்துடன் இந்தப் பழத்தை சாப்பிட்ட பயனையும் நீங்கள் இழக்கிறீர்கள்.

சமைக்கப்படாத காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றிற்கு என்ன சிறப்பு என்றால், அவை ஒருதுளி கூட வீணாகாமல் அவற்றின் முழு சக்தியை உங்களுக்குத் தருகின்றன.

அவற்றை பிற உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடுகிறபோது, அதன் ஊட்டத்தை உங்களால் பெறமுடிவதில்லை. அப்படியானால் எப்படி பழங்களை சாப்பிட வேண்டும்? காலை உணவு அருந்திவிட்டு வருகிறீர்கள். முற்பகல் 11.00, 11.30 மணியளவில் லேசாக பசி எடுக்கிறது என்றால் அப்போது தேநீர் அருந்துவதை விட, காப்பி அருந்துவதைவிட, பழங்கள் சாப்பிடலாம். அந்தப் பழங்கள் நன்கு செரித்து மீண்டும் பசியெடுக்கிற நேரம் உங்கள் மதிய உணவுக்கான நேரமாக இருக்கும். இதுதான் பழங்களை சாப்பிடுகிற முறை.

முழுக்க முழுக்க இயற்கை உணவுக்கு மாறி விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் உட்கொள்கிற உணவில் எது உங்களுக்கு பிராண சக்தியைத் தரும், எது உங்கள் பிராண சக்தியை எடுத்துவிடும் என்பதையெல்லாம் உரியமுறையில் தெரிந்து வைத்துக் கொண்டு, அந்த விழிப்புணர்வோடு உண்பது நல்லது.

மனித உடல், அசைவ உணவுக்கு ஏற்ற அமைப்பில் இல்லை. நீங்கள் உட்கொள்கிற அசைவ உணவு முழுக்க செரிக்க ஏறக்குறைய 72 மணி நேரங்கள் ஆகும். ஒரு துண்டு இறைச்சியை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு போனால், ஒரு நாளைக்குள் அது எவ்வளவு அழுகி விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியானால் உங்கள் உடலின் உட்பகுதியில் இருக்கிற உஷ்ண நிலையில் செரிமானமாகாத இறைச்சி உணவு 72 மணிநேரம் இருந்தால், அது எந்தவிதமான பலன்களை ஏற்படுத்தும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

அரிசி உணவு நல்லதா?

What is the right food for us

பலர் அரிசி உணவு சாப்பிடுகிறார்கள். இதில் பச்சரிசி நல்லதா? புழுங்கல் அரிசி நல்லதா? என்றெல்லாம் சந்தேகங்கள் வரும். அரிசியைப் புழுங்க வைப்பது, வேக வைப்பது என்பது ஒரு பாதுகாப்பு முறை. அவ்வளவுதான். புழுங்கலரிசியை நான்கு வருடங்களுக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும். பழைய காலங்களில் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் புழுங்கல் அரிசிகளை வைத்திருந்தார்கள். மற்றபடி இதில் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் உட்கொள்கிற உணவின் அளவைப் பொறுத்துதான், அரிசி உணவிலிருந்து நன்மையோ, தீமையோ பெற முடியும்.

நன்மை தரும் கீரைகள்

What is the right food for us

கீரைவகைகள் நார்ச்சத்து கொண்டவை, அவற்றை அளவோடுதான் உட்கொள்ள முடியும். ஏனெனில் அவற்றில் இருக்கிற பச்சையம், அவ்வளவு விரைவாக செரிக்கக் கூடியது அல்ல. சமைக்கப்படாத நிலையில் பச்சையம், அவ்வளவு சீக்கிரம் செரிக்காது. கீரைவகைகளைப் பக்குவப்படுத்தித்தான் உண்ண வேண்டும். நீங்கள் பார்த்திருக்க முடியும். நாய்கள், பூனைகள் போன்றவையெல்லாம் சில நாட்களில் சில புல் வகைகளை சாப்பிட்டு விட்டு, சிறிதுநேரம் கழித்து அவற்றை வாயில் எடுக்கும். இது தங்களுக்குள் இருக்கிற சளி, கொழுப்பு போன்றவற்றை வெளியேற்ற அந்த பிராணிகளுக்கு இயற்கை கற்றுத் தந்திருக்கிற முறை.

பாலும், தயிரும்…

What is the right food for us

எதைச் சாப்பிடுகிறீர்கள் என்றாலும் அது உங்களுக்கு ஏற்றதா? என்கிற விழிப்புணர்வு முதலில் தேவை. பால், தயிர் போன்றவைப் பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அது மிகவும் ஆரோக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பசுவை “கோமாதா” என்று அழைக்கிறோம். பசுவை ஏன் மாதா என்று அழைக்கிறோம் என்றால் ஒரு குழந்தையை பெற்றுவிட்டு தாய் இறந்து விட்டாலும் கூட, அந்தக் குழந்தைக்கு பால் தருகிற தாயாக பசு இருக்கிறது. ஆனால் 2 அல்லது 2 1/2 வயது, வரையில் தான் பால் மற்றும் பால் சார்ந்த உணவு வகைகள் நமக்கு செரிக்கும். அதற்குப் பிறகு அவற்றை செரிப்பதற்கேற்ற ஆற்றலை உங்கள் உடல் இழந்து விடுகிறது.

தொடர்ந்து பால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்கள், தயிர் அதிகமாக சாப்பிடுபவர்கள் ஒருவித மந்தமான நிலையில் இருப்பார்கள். எனவே இவற்றையெல்லாம் அனுபவப்பூர்வமாகப் பார்த்து, எந்த உணவு வகைகள் உங்களை விழிப்புணர்வோடு வைத்திருக்கின்றன. எந்த உணவு வகைகள் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன என்பதை நீங்களே தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.

அமெரிக்க நாடுகளுக்கு நீங்கள் போனால், “மூன்றாவது கோப்பையை மறந்து விடாதீர்கள்” என்ற விளம்பரத்தை நீங்கள் பார்ப்பீர்கள். என்ன சொல்லுகிறார்கள், “எப்படியும் 2 கோப்பை பால் சாப்பிட்டு விடுவீர்கள். ஆனால் 3-வது கோப்பை பால் சாப்பிட வேண்டும். அதை மறந்து விடாதீர்கள்” என்பது அந்த விளம்பரத்தின் பொருள். எனவே, பால் சாப்பிடுவது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறதா அல்லது மந்தமாக வைத்திருக்கிறதா என்பதை நீங்கள் கண்டுணர வேண்டும். வயிற்றுப் போக்குக்கு பால் ஒரு நல்ல மருந்து என்று சொல்லுவார்கள். மருந்துதான். அந்த மருந்தே உணவாகிவிடாது.

உறக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் உணவு

பொதுவாக, நீங்கள் உட்கொள்ளும் இயற்கை உணவின் அளவு கூடக்கூட நீங்கள் உறங்குகிற நேரத்தின் அளவும் குறைந்து கொண்டே வரும். அதிக உறக்கம் என்பது நீங்கள் போதிய சக்தியில்லாமல் இருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம். சிலபேர் 8 மணி நேரம் 10 மணி நேரம் உறங்குகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு ஓய்வு தேவை என்பது பொருளல்ல. அவ்வளவு தூரம் சக்தியிழந்து இருக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.

சிறிய செயல் செய்தாலும் உடனே தூக்கம் வருகிறதென்றால், போதிய சக்தி நிலை உடலில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான மனிதருக்கு 3 லிருந்து 4 மணி நேர உறக்கமே போதிய ஓய்வைத் தந்துவிடும். இயற்கை உணவுக்கு மாறுகிறபோதும், தியானம் புரிகிறபோதும் இயல்பாகவே உறங்கும் நேரம் குறைந்துவிடும். மனித உடலை அதற்குரிய நிலையில் வைத்திராமல், பொருளியலுக்கோ, ஆன்மீகத்திற்கோ மேற்கொள்கிற எந்த முயற்சியிலும் வெற்றி பெற இயலாது.

வாரிசு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்: ஆனால்…

பலாத்கார குற்றவாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு: பில்கிஸ் பானு மனு தள்ளுபடி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.