தமிழகத்தில் புதிதுபுதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களைத் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், மருந்து குடோன் பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் முத்துமாலை ராணி.
இவர், நிறுத்திவைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 14) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த அவர், “நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது” என குறிப்பிட்டார்.

”கொரோனா பாதிப்புக்குப் பின் குரங்கம்மை, வைரஸ் காய்ச்சல் மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது” எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், “புதிய நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தவறான செயல்களை திட்டமிட்டு, தங்கள் சொந்த நலனுக்காக இப்படி செய்கிறார்களா என்பதை விசாரிக்க வேண்டும்” என அறிவுறுத்திய நீதிபதி,
“மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறதா” எனவும் கேள்வியெழுப்பினார்.
“புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
மேலும், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: ”ரிசைன் பண்ணிடுவேன்”- அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!
பிடிஆர் தவிப்புக்கு அமைச்சர் மூர்த்தி காரணமா?