நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? நாளை அறிவிப்பு!

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, சில கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதையடுத்து, கடந்த 2018 ஏப்ரல் 16ஆம் தேதி கைதானார்.

நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.

அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும், நிர்மலா தேவியைக் குற்றவாளி எனவும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.

தண்டனை விவரம் பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் மதியம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிர்மலா தேவி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. “பாலியல் தொழிலில் யாரையும் வலுக்கட்டாயமாக யாரும் ஈடுபடுத்தப்படவில்லை. எனவே இதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி பகவதி அம்மாள் ஒரு நாள் கால அவகாசம் அளித்து, நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சிபிசிஐடி வழக்கறிஞர் சந்திரசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், “நிர்மலா தேவி தரப்பு தண்டனையைக் குறைக்கச் சொல்லிக் கேட்கலாம். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளாவது தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதாவது பாதிக்கப்பட்டவர் ஒருவராக இருந்தால் 7 ஆண்டுக்காலம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கில் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 10 ஆண்டுகள் கட்டாயம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

2 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்” என்று கூறினார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூரத்தை அடுத்து இந்தூர்: காங்கிரஸ் வேட்பாளரை தட்டித் தூக்கிய பாஜக

நடிப்புக்காக அல்லாமல் பிரகாஷ் ராஜுக்கு முதல் விருது!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts