உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இருந்து உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
அதன்படி, தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் உத்தராகண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்றிருந்தனர்.
பின்னர் அவர்கள் திரும்பி வர இருந்த நிலையில், தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (செப்டம்பர் 14) திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் அனைவரும் கீழே இறங்க முடியாமல் சிக்கினர்.
இதனையடுத்து நிலச்சரிவால் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நிலச்சரிவில் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கிய தகவலை கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆகியோருக்கு அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடனடியாக தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி உத்தரகாண்ட் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரும் கேட்டுக்கொண்ட நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பித்தரோகர் மாவட்ட ஆட்சியர், சிக்கிய 30 தமிழர்களின் நிலை குறித்து விவரித்துள்ளார்.
இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக மீட்பு பணிகள் தடைபட்டுள்ளது. அதே வேளையில் தமிழர்கள் இருக்கக்கூடிய பகுதிக்கு அருகில் ஹெலிபேட் இருப்பதால் ஹெலிகாப்டர் மூலம் மூலம் தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவால் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பதால், அவர்களை பத்திரமாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்துவரும்படி உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஓய்வு காலத்திலும் நிம்மதி இல்லை: குமுறும் வனத்துறை ஊழியர்கள்!
பேரறிஞர் அண்ணாவின் பேசப்படாத சாதனை!