கால் சவ்வு அறுவை சிகிச்சை செய்து கொண்ட கால்பந்து வீராங்கனை(17வயது) பிரியா உயிரிழப்பிற்கான காரணங்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த பிரியா, கால்பந்து போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.
சென்னை குயின்மேரிஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியாவுக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, காலில் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் பிரியா.
அவருக்கு 7 ஆம் தேதி கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால் காலில் வலி குறையாததால் மாணவி பிரியா, உயர் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மாணவி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் காயம் எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதனை செய்த பொழுது, காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கால் நீக்கப்பட்ட உடன் கட்டு போட்டபோது அதை இறுக்கமாக கட்டியிருக்கின்றனர். இதனால் அந்த இடத்தில் ரத்தம் கட்டியதாக சொல்லப்படுகிறது.

“தசை கிழிந்ததால் தசையில் இருந்து வெளிவரக்கூடிய திரவ வடிவிலான மயோகுளோபின் என்ற திரவம் வெளியேற துவங்கியது.
அந்த திரவம் பொதுவாக சிறுநீர் வழியாக தான் வெளியேறும். ஆனால் திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சிறுநீரக பாதிப்பு முதலில் ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழந்தது.
அதன்பிறகு கல்லீரல் செயலிழந்தது. பிரியாவின் ரத்த ஓட்டமும் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இரத்த ஓட்டம் பாதித்ததால் ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழக்கத் தொடங்கியிருக்கின்றன.
சிறுநீரகம் செயலிழந்ததால் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றார். அவருக்கு நேற்று இரவு முழுவதும் டயாலிசிஸ் செய்யப்பட்டது.
ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒரு ஒரு உறுப்புகளாக செயல் இழந்த நிலையில் மாணவி பிரியா இன்று (நவம்பர் 15) காலை 7.15 மணியளவில் உயிரிழந்ததாக” மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
பிரியா மரணம் : “திமுக ஆட்சியில் மருத்துவத்துறை அழிந்து விட்டது” – அண்ணாமலை
Comments are closed.