17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அப்போது ‘சிங்கம் அண்ணா’ செய்த காரியம்!

Published On:

| By Kumaresan M

இந்தியாவிலே எங்கும் நடக்காத வகையில் முதல் முறையாக ஒரு அரசியல்வாதி தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை குப்புசாமிதான். கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பேட்ச் அதிகாரியான அண்ணாமலை லக்னோ ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ படித்தவர். இவர், திடீரென தன் போலீஸ் பதவியை துறந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து ஆளும் கட்சிக்கு கடுமையான எதிர்ப்பை காட்டி வருகிறார்.

அண்ணா பல்கலையில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்துதான் அண்ணாமலை தன்னை 8 முறை சாட்டையால் அடித்து கொண்டார். அண்ணாமலை தான் பதவியில் இருந்த போதும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு போராடி தண்டனை வாங்கிக் கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது. அது எப்போது நடந்தது எங்கு நடந்தது என்று பார்க்கலாம்.

கர்நாடகத்தில் 8 ஆண்டுகள் அண்ணாமலை ஐ.பி.எஸ் பதவியில் இருந்தார். அப்போது பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்ததால் ‘சிங்கம் அண்ணா ‘ என்ற செல்லப் பெயரும் அவருக்கு உண்டு.

பொதுவாக தமிழர்களை பிற மாநில மக்கள் அண்ணா என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த வகையில், கர்நாடக மக்கள் அண்ணாமலையை செல்லமாக சிங்கம் அண்ணா என்று அழைத்தனர். அண்ணாமலையின் போலீஸ் வாழ்க்கையில் ஒரு வழக்கு மிக முக்கியமானது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அண்ணாமலை உடுப்பி மாவட்ட எஸ்.பியாக இருந்தார். அப்போது, பைண்டுர் என்ற இடத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

ஒரு கட்டத்தில் மகளை பறிகொடுத்த ஏழை தாய் எஸ்.பி அண்ணாமலையை சந்தித்து தன் மகளுக்கு ஏற்பட்ட நிலையை கூறி கண் கலங்கினார். அப்போது, தன் மகளை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதோடு, என் மகளின் நினைவாக ஏதாவது ஒரு நல்ல காரியம் நடைபெற வேண்டுமென அண்ணாமலையிடத்தில் உருக்கமாக கோரிக்கை விடுத்தார். இரண்டே நாட்களில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று அந்த தாய்க்கு அண்ணாமலை வாக்குறுதி கொடுத்தார்.

அடுத்த நிமிடமே நேரடியாக களம் இறங்கிய அண்ணாமலை குற்றவாளிகளை இரண்டே நாட்களில் பிடித்து சிறையில் அடைத்தார். குற்றவாளிகள் 19 வயது கொண்ட இளைஞர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர், இறந்த சிறுமியின் தாய்க்கு கொடுத்த வாக்குறுதிபடி , அந்த சிறுமி மக்களின் நினைவில் வாழும் வகையில் அண்ணாமலை மற்றொரு காரியத்தையும் செய்தார்.

சிறுமி சார்ந்த பைண்டுர் தாலுகாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆம் வகுப்பில் முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு 10 ஆயிரம் ரொக்க பரிசு சிறுமியின் நினைவாக வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

அண்ணாமலை செய்த காரியத்தையடுத்து, அந்த மாணவியின் தாய் மன நிம்மதியடைந்தார்.

எம்.குமரேசன்

அனுமதி மறுப்பு… தடையை மீறி விஜயகாந்த் நினைவு தின பேரணி!

மன்மோகன் சிங்கின் முதுகில் குத்திய மிடில் கிளாஸ் – ஆனந்த் சீனிவாசன் வேதனை பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share