வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுத்து இந்திய இளைஞர்கள் மற்றும் பெண்களை மயக்கி வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இந்தியாவுக்கு எதிராகவே சைபர் க்ரைம்களில் ஈடுபட வைக்கிறது சீன நாட்டை சேர்ந்த கும்பல்.
சமீபகாலமாக சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஜி பேவில் வேண்டுமென்றே பணம் அனுப்பிவிட்டு அந்தப் பணத்தை திருப்பி அனுப்ப சொல்வது, அப்படி பணம் அனுப்பினால் நமது அக்கவுண்டில் இருந்து அனைத்து பணத்தையும் ஆட்டையை போடுவது, உங்கள் பெயரில் கூரியரில் போதைப் பொருட்கள் வந்துள்ளன. போலீசிடம் சொல்லாமல் இருக்க பணம் அனுப்புங்கள் என்று கூறி ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த குற்ற செயல்கள் தொடர்பாக லாவோஸ், மியான்மர், கம்போடியா நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மத்திய அரசுக்கும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கும் முக்கிய தகவல்கள் அனுப்பியுள்ளன.
அந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. அதாவது, கம்போடியா, மியான்மர், லாவோஸ் நாடுகளில் வேலை இருப்பதாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்களை ஏஜெண்டுகள் மூலம் அழைத்து சென்று அவர்களை சைபர் கிரைமில் ஈடுபட வைப்பதுதான் இந்த கும்பலின் முக்கிய நோக்கமாகும். இதையடுத்து, டி.ஜி.பி சங்கர் ஜிவாலின் உத்தரவையடுத்து, எஸ்.பி.க்கள் முத்தரசி , சண்முகப்பிரியா ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் , கம்போடியா செல்லவிருந்த கும்பகோணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு, அவர்களை மீண்டும் கும்பகோணத்துக்கே அனுப்பி வைத்தனர்.
அதே போல, லாவோஸ் நாட்டில் இருந்து வந்த நான்கு இளைஞர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வாங்கிய பின்னரே போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த விஷயத்தில் இவ்வளவு தீவிரம் காட்டுவது ஏன் ? இந்தியா ஏன் இவ்வளவு பதற்றமடைகிறது என்று விசாரணையில் இறங்கிய போது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.
வெளிநாடுகளில் 60 ஆயிரம் முதல் 6 லட்சம் வரை மாத சம்பளம் என்றும் ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். என்ஜீனியரிங், டேட்டா என்ட்ரி வேலைக்கு பிஇ கம்யூட்டர், டிப்ளமோ கம்யூட்டர் பட்டத்தாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் முதலில் இந்த கும்பல்களின் ஏஜெண்டுகள் விளம்பரம் செய்வார்கள். இந்த கும்பலுக்கு ஏஜெண்டுகள் ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ளனர். இந்த ஏஜெண்டுகள் ஒரு இளைஞரை அனுப்பி வைத்தால் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து 25 ஆயிரம் பேர் வரை இந்த 3 நாடுகளுக்கும் சமீபத்தில் சென்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 500 பேர் வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி வரை 100 பேர் மேற்கண்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்திலிருந்து தஞ்சை, கும்பகோணம், ராம்நாடு, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் சென்றுள்ளனர். அவர்கள் பலரை மீண்டும் அந்த நாடுகளுக்கு செல்லாமல் சிபிசிஐடி போலீசார் தடுத்து வருகின்றனர்.
சீனர்கள் பலர் கம்போடியா, லாவோஸ், மியான்மர் நாடுகளில் தீவு போன்ற தனிமையான இடங்களில் பத்து மாடி கட்டடங்களில் இந்த நிறுவனங்களை நடத்தி வருகின்றனர் . இந்த நிறுவனங்களில் இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, நைஜீரியா, எத்தியோப்பியா, கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு முதலில் ஒரு மாதம் பயிற்சி கொடுக்கிறார்கள். பெண்களிடம் ஆண்களை மயக்கும் விதத்தில் எப்படி பேசுவது… ஆண்களிடத்தில் பெண்களை மயக்குவது எப்படி என்று பலவிதங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலை செய்ய மறுத்தால், பயிற்சி பெற மறுத்தாலோ பயங்கரமான தண்டனை கொடுக்கிறார்கள். 10 மாடி கட்டடத்தில் மாடிப்படிகளை ஏற வைப்பது, தொடை மற்றும் கடுங்கால் வீங்கும் அளவுக்கு தோப்புக்கரணம் போட வைப்பது. மணி கணக்கில் முட்டிபோட வைப்பது, சுவரில் தலைகீழாக சாய்ந்து நிற்க வைப்பது, அவ்வளவு ஏன் கரண்ட் ஷாக் வரை கொடுப்பார்கள். இது போன்ற தண்டனைக்கு பயந்து இளைஞர்கள் வேலையை செய்ய தொடங்கி விடுவார்கள்.
முதலில் இந்த இளைஞர்களிடத்தில் டிக் டாக், பேஸ்புக், ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் இருந்து தொடர்பு எண்களை ஒரு பிரிவு சேகரித்து கொடுக்கும். அதோடு, இந்தியாவிலுள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடத்தில் இருந்தும் ஆதார் கார்டு, போன் எண்களை எளிதாக சேகரித்து விடுகின்றனர்.
அந்த எண்களை தொடர்பு கொண்டு கேசினோ விளையாட்டுகளில் இவ்வளவு தொகை போட்டால் இவ்வளவு சம்பாதிக்கலாம் என மூளை சலவை செய்து பணம் பறிப்பார்கள். யாராவது ஒருவர் Gpay எண்ணுக்கு வேண்டுமென்றே பணம் போட்டுவிட்டு, தவறுதலாக பணம் போட்டுட்டேன் அதை திருப்பி அனுப்புங்கள் என்று மிரட்டுவார்கள் அசிங்கமாக பேசுவார்கள், பயந்து போய் பணத்தை திரும்ப போட்டால் பணம் அனுப்பியவர் கணக்கிலிருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவார்கள்.
பெண்களின் அரைகுறை படங்களை பகிர்ந்து … தொடர்பு எண் கொடுப்பார்கள். சலன புத்தியுள்ளவர்கள் மயங்கினால் அட்வான்ஸ் பணம் போட சொல்வார்கள். அல்லது காதலிப்பது போல் காதலித்து அவசர செலவுக்கு பணம் போடச் கூறுவார்கள். பணம் போட்டதும், அந்த சிம்கார்டை கழற்றி தூக்கிப் போட்டு விடுவார்கள். பெண்களை எடுத்து கொண்டால், 35 வயதுக்கு மேலுள்ள குடும்ப பெண்கள் இவர்களின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறார்கள்.
இந்த பெண்கள் பொருளாதார ரீதியாக ஸ்டாங்காக இருப்பார்கள், கணவரின் அன்புக்கு ஏங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கணவரிடம் அதிருப்தியில் இருப்பவர்களை கண்டுபிடித்து அன்பாக பேசுவது போல பேசி மயக்கி விடுவார்கள். முதலில் மிஸ்டு கால்தான் இவர்களிடத்தில் இருந்து வரும். பின்னர், படிப்படியாக பேசி பழகி மயக்கி விடுவார்கள். ஒரு கட்டத்தில் பணத்தை பறித்து கொண்டு சிம்கார்டை கழற்றி எரிந்து விடுவார்கள்.
இந்த மூன்று நாடுகளுக்கு இந்தியாவில் இருந்துதான் சிம்கார்டுகள் அனுப்பப்படுகிறது. குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் சிம்கள் கண்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது, தனியார் வசம் ஏராளமான துறைமுகங்கள் இருப்பதால், சிம்கார்டுகளை எளிதாக அனுப்பி வைத்து விடுகிறார்களாம்.
இந்த மாதிரி குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனங்களை சேர்ந்தவர்களை பிடிக்க இந்திய போலீஸ் சென்றால், அந்த நாட்டை சேர்ந்த பாரா மிலிட்டரியே அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக வந்து நிற்கிறதாம். ஏனென்றால், அந்த நாட்டு அரசாங்கங்களுக்கு இந்த நிறுவனங்கள் அவ்வளவு வரியை கொட்டி கொடுக்கின்றன என்றும் கூறுகிறார்கள்.
பொதுவாக , அமெரிக்கா போன்ற நாடுகளில் கேஷ் அல்லது கார்டு இவற்றை கொண்டுதான் பொருள்களை மக்கள் வாங்குவார்கள், ஆனால், இந்தியாவில் போன் பே, கியூஆர் கோர்டு, ஜி பே போன்ற டிஜிட்டல் முறைகளில் பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதால் எளிதாக ஏமாற்ற முடிவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
– வணங்காமுடி
காஞ்சி செல்கிறீர்களா? வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு!
லெபனான் பேஜர் வெடிப்பு… பின்னணியில் இருந்த இந்தியர் மாயமான பின்னணி!
டிஜிட்டல் இந்தியா, உலகத்துக்கே வழிகாட்டி லோககுருனு உருட்டியே ஜீபே, போன்பேனு பலவிதத்துல செலவழிக்க வச்சீங்களே, இப்ப இப்படி சீனாக்காரங்கிட்ட மாட்டி வச்சுட்டிங்களே, இதுக்கு என்ன செய்யப் போறாரு லோககுரு?