கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று (அக்டோபர்29) செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
திசை திருப்ப முயற்சி!
அதில், “கோவை கார் வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அவதூறு பரப்பி வருகிறார்.
காரில் இருந்து வெடித்து சிதறிய பொருட்கள் என்ன என்பது குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அதுபற்றி கருத்து கூறி திசை திருப்ப முயற்சித்தார்.
என்.ஐ.ஏ விசாரணை – நடைமுறை என்ன?
வழக்கை தாமதமாக என்.ஐ.ஏவுக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறு. இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தவுடன் மாநில காவல்துறை விசாரணை நடத்துவது தான் வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
வழக்கில், பயங்கரவாத தடுப்புச் சட்டம் (உபா) சேர்க்கப்பட்டாலோ அல்லது தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் 2008 பட்டியலிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலோ என்.ஐ.ஏ சட்டம் 6ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல்நிலைய அதிகாரி மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அறிக்கையை மாநில அரசு பெற்றவுடன், மத்திய அரசுக்கு அதனை விரைவில் தெரியப்படுத்தவேண்டும்.
அந்த அறிக்கையை பெற்ற மத்திய அரசு, அடுத்த 15 நாட்களுக்குள் வழக்கின் தன்மைக்கேற்ப தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இது தான் நடைமுறை.
இதில் மத்திய அரசு, என்.ஐ.ஏவுக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவது உண்டு. அதுவரை அந்த வழக்கின் விசாரணையை வழக்குப்பதிவு செய்த காவல் நிலைய அதிகாரி புலனாய்வு செய்வார்.
தாமதம் எங்கே ஏற்பட்டது?
கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறை எந்தவித தாமதமும் இன்றி விசாரணையை மேற்கொண்டது.
சில மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமைக்கு ஒரு மாதம் கழித்தே வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கில் மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்னரே தமிழக முதல்வர் என்.ஐ.ஏ விசாரிக்க பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இப்படியிருக்க இதில் எங்கே தாமதம் ஏற்பட்டது?
உளவுத்துறை எச்சரித்தது என்பது பொய்!
மேலும் கோவையில் வெடிகுண்டு நிகழ்வு நடக்கப்போவதை மத்திய அரசின் உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக அண்ணாமலை கூறுவது அபத்தமான செயலாகும்.
அண்ணாமலை குறிப்பிட்ட சுற்றறிக்கை புதுடெல்லியில் இருந்து கடந்த 18ம் தேதி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பட்ட வழக்கமான சுற்றறிக்கையாகும்.
18ம் தேதியிட்ட வழக்கமான அந்த சுற்றறிக்கையானது 21ம் தேதி பெறப்பட்டு அனைத்து மாவட்ட, நகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலை குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கையில் கோவை மாநகரைப் பற்றி எந்த தகவலும் கூறப்படவில்லை.
ஆனால், மாநில அரசுகளுக்கு குண்டு வெடிப்பைப் பற்றி முன்கூட்டியே கூறியதாகவும், அதை மாநில காவல்துறை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாக பழி சுமத்தி பொய்பிம்பத்தை அண்ணாமலை உருவாக்குகிறார்.
களங்கம் கற்பிக்க வேண்டாம்!
ஒருவேளை அண்ணாமலை குறிப்பிட்டது போல் கோவை குண்டுவெடிப்பை பற்றி மத்திய உளவுத்துறை முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருந்தால், அடுத்த நிமிடமே தமிழக காவல்துறை சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து இந்த சம்பவத்தை தடுத்திருக்கும்.
எனவே இதுபோன்ற உண்மையில்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி, முன்னாள் கர்நாடக காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, தமிழக காவல்துறைக்கு களங்கம் கற்பிக்க வேண்டாம்” என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
T20 WorldCup 2022: இலங்கையை கடைசி இடத்திற்கு தள்ளிய நியூசிலாந்து
ஆளுநரை பதவி நீக்கம் செய்க : கே.பாலகிருஷ்ணன்
எல்லா தெரிந்த அ. மலையை ஏன் விசாரிக்க கூடாது