ஒடிசா ரயில் விபத்து: தகவல் கிடைக்காத 8 தமிழர்களின் நிலை?

தமிழகம்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் நிலை இதுவரை தெரியப்படாத நிலையில், அவர்கள் விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒடிசா மாநிலம்‌ பாலசூரில்‌ ஏற்பட்ட பெரும்‌ இரயில்‌ விபத்தில்‌ காயமடைந்த தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம்‌ மற்றும்‌ இதர உதவிகளை செய்திடவும்‌, உயிரிழந்தவர்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடவும்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவின்‌ பேரில்‌ மீட்புக்‌ குழு அமைக்கப்பட்டது.

மேலும்‌, மீட்புப்‌ பணிகள்‌ குறித்த விபரங்களை பெறுவதற்காகவும்‌, பயணிகளின்‌ உறவினர்கள்‌ பயணிகளைப்‌ பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில்‌ சென்னை எழிலகத்தில்‌ மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்‌ செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்‌,  முதல்வர் உத்தரவின்‌ பேரில்‌ ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு இரயிலில்‌ பயணம்‌ செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல்‌ தென்னக இரயில்வேயிலிருந்து பெறப்பட்டது.

அதில்‌ தமிழ்ப்‌ பெயர்‌ கொண்டவர்களையும்‌, தமிழ்நாட்டில்‌ இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல்‌ தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில்‌ உள்ள 127 நபர்களை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில்‌, 119 நபர்கள்‌ பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும்‌ முகவரி இல்லாத நிலையில்‌ அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒடிஷாவில்‌ முகாமிட்டுள்ள மீட்புக்‌ குழுவும்‌, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறையின்‌ கட்டுப்பாட்டு அறையும்‌ இணைந்து தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும்‌ பணியினை மேற்கொண்டு வருகிறது.

மேலும்‌, இந்த இரயில்‌ விபத்தில்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள்‌ ஒடிசாவில்‌ இதுவரை சேகரிக்கப்பட்டதில்‌ தமிழ்நாட்டை சேர்ந்த எவரும்‌ இந்த இரயில்‌ விபத்தில்‌ உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது.

மேலும்‌, விபத்தில்‌ காயமுற்று சிகிச்சை பெற்றுவரும்‌ நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில்‌ தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்‌ யாரும்‌ காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும்‌ தெரியவந்துள்ளது.

இந்நிலையில்‌, இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின்‌ அடிப்படையில்‌ தொடர்புகொள்ள இயலாத நிலையில்‌ உள்ள கீழ்கண்ட 8 நபர்களது உறவினர்கள்‌, நண்பர்கள்‌ ஆகியோர்‌, இவர்கள்‌ குறித்த தகவல்‌ அறிந்தால் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு (கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 அல்லது செல்போன் – 9445869843) எண்களில்‌ தகவல்‌ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 8 பேர் குறித்து தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

1 நாரகணிகோபி, ஆண்‌, வயது – 34

2 கார்த்திக்‌, ஆண்‌, வயது – 19

3 ரகுநாத்‌, ஆண்‌. வயது – 21

4 மீனா, பெண்‌, வயது – 66.

5 எ. ஜெகதீசன்‌, ஆண்‌, வயது – 47

6 கமல்‌, ஆண்‌, வயது – 26

7. கல்பனா, பெண்‌, வயது – 19

8. அருண்‌, ஆண்‌, வயது – 21

இதற்கிடையே தகவல் பெறப்படாத 8 பேரும் தட்கல் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில் ரயிலில் ஏறவில்லை என்றும், அவர்கள் ஏறுவதற்கு முன்பே ரயில் விபத்துக்குள்ளானதால் அவர்கள் நலமுடன் இருக்க வாய்ப்புள்ளது என்று மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த 8 பேர் குறித்த தகவல் தெரிந்தால் உடனே கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்: அமைச்சர் அஸ்வினி

’ரயில்வே அமைச்சரே நீங்களாகவே பதவி விலகுங்கள்’: சுப்பிரமணிய சாமி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *