அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழையின் தாக்கம் எங்கு, எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று (நவம்பர் 13) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுக் குறைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட தமிழகம் புதுவை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடல் பகுதிக்குச் சென்றுவிடும்.
எனினும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு ஒரு இடைவேளை!
இந்நிலையில் அடுத்த ஒருவாரத்திற்கு தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜாண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலை தள பக்கத்தில், ”சென்னையை நோக்கி இன்னும் அதிகளவில் மழை மேகங்கள் நகரும். இந்த நிலை நாளை (நவம்பர் 14) காலை வரை தொடரும்.
அதனைதொடர்ந்து நாளை மாலை முதல் 20ம் தேதி வரை சென்னையில் மிகக் குறைந்த மழையே பெய்யும். இந்த இடைவெளியை சென்னை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நவம்பர் 20-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களை தாக்க உள்ளது.
இரவில் மழை இருக்கும்!
தற்போது அரபிக்கடல் நோக்கில் செல்லும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், வட தமிழகத்தில் பகல் நேரங்களில் மழை குறைவாகவே இருக்கும்.
இரவு மற்றும் அதிகாலையில் வட தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் நல்ல மழையை பெறும்.
தென் தமிழகத்தில் கனமழை!
அதேவேளையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தென் தமிழக பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக அடுத்த 2 நாட்களுக்கு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அதிக கனமழை இருக்கும்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இடைவேளை விட்டு மழை தொடரும்.” என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அலெர்ட் : அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!