ஃபெஞ்சல் புயலின் காரணமாக விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று (டிசம்பர் 2) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை, விழுப்புரத்தில் 42 செ.மீ மழை, தர்மபுரியில் 33 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வீடுகள், வாகனங்களும் பலத்த சேதாரம் அடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ” நேற்று (01-12-2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்,
இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
02-12-2024: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழையும்,
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சமவெளிப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
03-12-2024: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
02-12-2024 மற்றும் 03-12-2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஒரே நாளில் 51 செ.மீ மழை… நிரம்பிய வீடூர் அணை… தனித்தீவான மயிலம்