வாட்டி வதைக்க போகும் வெயில்: வானிலை மையம்!
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் முதல் வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது.
இதையடுத்து டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் உருவாகி அது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. பின்னர், காலை வேளைகளில் மூடுபனி தமிழகம் முழுவதும் நிலவியது.
இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (பிப்ரவரி 22 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 23 ) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
பிப்ரவரி 24 முதல் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இலவச திருமண திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு!