சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ந்த வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. மதியம், இரவு நேரங்களில் புழுக்கத்தால் மக்கள்சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.06.2023 – வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20.06.2023 மற்றும் 21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன் 18) ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, குன்றத்தூர், மதுரவாயல் ,மாம்பலம், மயிலாப்பூர், பூவிருந்தவல்லி, அயனாவரம், பெரம்பூர்,
புரசைவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது, சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
ஞாயிறு அன்று குளிர்ந்த வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரியா
12 மணி நேரம்… ரஞ்சிதமே ஸ்டைலில் மாணவர்களுக்கு விஜய் முத்தம்!
திருப்பூரில் மூடப்பட்ட 40% பின்னலாடை நிறுவனங்கள்: காரணம் என்ன?