தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவில் அதிகாரமிக்க ஆணையம் வேண்டும் என ஆளுநரிடம் கூறியுள்ளதாக தேசிய ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
மதுரை கோட்ட ரயில்வேயில் பணிபுரியக்கூடிய தூய்மை பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் மதுரை ரயில்வே மண்டபத்தில் இன்று (ஜூன் 26) நடைபெற்றது.
இதில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வீடியோ ஆதாரத்துடன் புகார்
இந்த கூட்டத்தில் பேசிய தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு ஒப்பந்தப்படியான ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
தங்களுக்கான தேவைகள் குறித்து ஒப்பந்த நிறுவனங்களிடம் கேட்டால் தங்களை வேலையில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.
தங்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை. ஆனால் போனஸ் பெற்றதாக ஒப்பந்த நிறுவனம் கையெழுத்திடுமாறு மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்போது, எழுந்த தூய்மை பணியாளர் ஒருவர் தங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களான கையுறை உள்ளிட்டவைகளை மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வழங்குவதாகவும், இதன் காரணமாக ரயிலில் உள்ள கழிப்பறைகளில் கைகளால் மலத்தை அள்ளும் நிலை உள்ளதாகவும் கூறி தன்னிடம் இருந்த வீடியோ ஆதாரத்துடன் காட்டி புகார் அளித்தார்.
அந்த தூய்மை பணியாளரின் ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என வெங்கடேசன் உறுதியளித்தார்.
கையெழுத்து கேட்டு மிரட்டல்!
பின்னர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தூய்மை பணியளர்களுக்கு ஊதியம் குறைவு தான் பிரதான பிரச்சனையாக உள்ளது. மதுரை ரயில்வேயில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.600 ஊதியத்திக்கு பதிலாக ரூ.365 தான் கிடைப்பதாக தெரிவித்தனர். ஊதியம் சரியாக தராத ஒப்பந்த நிறுவனத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோட்ட மேலாளரிடம் கூறியுள்ளேன்.
இதுவரை ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு PF எண் கூட அளிக்கவில்லை. சில பணியாளர்களிடம் போனஸ் வாங்கியது போல ஒப்பந்த நிறுவனங்கள் கையெழுத்து கேட்டு மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர். போனஸ் பெற்றால் மட்டுமே கையெழுத்து இட வேண்டும் என அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்.
ரயில்வேயில் பணிபுரியும் பெண் தூய்மை பணியாளர்கள் மற்றும் பட்டியலின தூய்மை பணியாளர்களுக்கு எதிராக நிகழும் துன்புறுத்தல் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக கூறி ரயில்வேயில் பணம் பெற்றுவிட்டு அந்த பணம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுக்கப்படுவதில்லை. அதனால் குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தை ரயில்வேக்கு மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு
மேலும் அவர், “ரயில்வேயில் கையால் மலம் அள்ளும் நிலை ஒழிக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில் தற்போதும் அது தொடர்வது வேதனையளிக்கிறது. அப்படி பணியாளர்களை ஈடுபடுத்திய ஒப்பந்த நிறுவனத்தின் அனுமதி தடை செய்யப்படும்.
கையால் மலம் அள்ளும் புகார் குறித்து உறுதியானால் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கையால் மலம் அள்ளும் வீடியோ புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு ஒப்பந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்படும்” என தெரிவித்தார் வெங்கடேசன்.
ஆளுநரிடம் முறையீடு!
தொடர்ந்து, “தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்த பணி முறையை ரத்து செய்ய வேண்டும். 1993 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் 225 பேர் மலக்குழி மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மலக்குழி மரணத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதனை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் மலக்குழியில் இறங்க மாட்டேன் என தூய்மை பணியாளர்கள் உறுதியோடு இருக்க வேண்டும்.
ஏழ்மை நிலையால் சில தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் குழி , மலக்குழிகளில் இறங்கும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
தற்போது நிரந்தர தூய்மை பணியாளர் ஓய்வுபெறும் போது அதற்கு தற்காலிக பணியாளர்களை நியமிக்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
இந்த தொழிலில் பட்டியலினத்தவர்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரமற்ற நலவாரியம் உள்ளது. எனவே மாநில அளவில் ஆணையம் வேண்டும் என கவர்னரிடம் கூறியுள்ளோம் என்றார்.
இராமலிங்கம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு பின்னணி!
தமிழக காங்கிரஸ் தலைவர்: மாற்றப்படுகிறாரா அழகிரி?