தேர்வுக்கு நோ டென்ஷன்: மாணவர்கள் முதல்ல இத படிங்க!
பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பினாலும் தேர்வு பயத்தினாலும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் NCERT நடத்திய கருத்துக் கணிப்பில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் இந்திய மாணவர்களில் 80 சதவிகிதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களின் தற்கொலைகள் சதவீதம் 21.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மாணவர்கள் நலனில் நாம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
“மாணவர்கள் தங்களது மதிப்பை மதிப்பெண்ணில் மட்டும் பார்க்கிறார்கள். இதனால் தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைவாக எடுத்தாலோ மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தேர்வு காலங்களில் நேர மேலாண்மையும் திட்டமிடுதலும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை அவர்கள் சரியாக பின்பற்றினாலே கடைசி நேர பதட்டம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடலாம்.” என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
தேர்வு காலங்களில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் இருக்க உளவியல் நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்.
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்:
தொடர்ச்சியான படிப்புகளுக்கு மத்தியில் சற்றே இடைவேளை எடுத்து உங்களுக்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரங்களில் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களது தவறுகளை திருத்தி நீங்களே உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களை நேசிக்கவில்லை என்றால் பின்னர் யார் உங்களை நேசிப்பார்கள்.
கொஞ்சம் ஓய்வு எடுங்கள்:
ஒரு நாளைக்கு மாணவர்கள் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க வேண்டும். போதுமான நேரம் தூங்கவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி, மனச்சோர்வு, உடல் மற்றும் மனநல பாதிப்பு ஏற்படும். சிறந்த தூக்கம் நல்ல மனநிலையையும் படிப்பதற்கான ஆற்றல் மற்றும் உந்துதலையும் கொடுப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
சுவாசத்தில் கவனம் செலுத்துங்க:
மன அழுத்தம் மற்றும் கவலையாக இருந்தால் சில நிமிடங்கள் மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உங்களை மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து விடுபடச் செய்யும்.
சுறுசுறுப்பாக இருங்கள்:
மாணவர்களின் சமூக ஊடக பயன்பாடு அவர்களது உடற்பயிற்சியை குறைத்துள்ளது. இது அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களது ஆற்றல் அதிகரிக்கும். இதனால் மாணவர்கள் நடைபயிற்சி, ஓடுதல், விளையாட்டு, யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
பாடல் கேளுங்கள்:
தேர்விற்கு படித்துக்கொண்டிருக்கும் போது இடைவேளையில் மனதிற்கு பிடித்தமான பாடல்கள் கேளுங்கள். பாடல்களை கேட்பது மன அழுத்தத்தை குறைக்கும்.
யாரிடமாவது பேசுங்கள்:
தேர்வு குறித்து உங்களுக்கு பயமாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமோ, குடும்ப உறுப்பினர்களிடமோ பேசுங்கள். உங்கள் நண்பர்களோ, வகுப்பு தோழர்களோ தேர்வு குறித்து பயம் தெரிவித்தால் அவர்களுக்கு நீங்கள் ஆதரவான வார்த்தைகளை தெரிவிக்கலாம்.
இந்த விஷயங்களை பின்பற்றி தேர்வை பயம், பதட்டம் இல்லாமல் எழுதுங்கள். ஆல் தி பெஸ்ட்..!
ஈரோடு கிழக்கு: 74.69 சதவீதம் வாக்குகள் பதிவு!
அதிமுக கட்சி விதி திருத்தம்: தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல்!