சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து அதிக நீர் திறந்துவிடப்படுவதால், ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் இன்று (டிசம்பர் 14) வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாக உள்ள நிலையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி நீர் இருப்பு 22.76 அடியாக உயர்ந்துள்ளது. கொள்ளளவு 3315 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2450 கன அடியாகவும் உள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் மழை குறைந்தாலும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
மேலும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறந்த விடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், நேற்று வினாடிக்கு 4500 கன அடி உபரி நீர் அடையாற்றில் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று மதியம் 12.00 மணியளவில் வினாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது.
புழல் ஏரி – 1000 கன அடி நீர் திறப்பு!
செங்குன்றம் புழல் அருகே உள்ள புழல் ஏரியிலும் இன்று காலை 10 மணி நிலவரப்படி நீர் இருப்பு 19.72 அடியாகவும், கொள்ளளவு 2956 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 709 கன அடியாகவும் உள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து நேற்று வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 1,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியில் நீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே பூண்டி மற்றும் புழல் ஏரியில் கடந்த 2 நாட்களாக 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னை சடையாங்குப்பம் பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsAUS : 100வது டெஸ்ட்… கபா மைதானத்தில் வரலாறு படைப்பாரா கோலி?