நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு கிடக்கின்றன.
நெல்லை, குமரி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி, மாவட்டங்களை சேர்ந்த உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 முதல் 1500 நபர்கள் வரை நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏழு தளங்கள் செயல்படுகின்றன.
அதில் இதயவியல், பிளாஸ்டிக் சர்ஜரி, சிறுநீரகவியல், மற்றும் சிறுநீரியல், உட்பட ஏழு மருத்துவ பிரிவுகள் மற்றும் அறுவை சிகிச்சை தளங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவ கட்டிடத்தை ஒட்டி உள்ள பகுதியில் மருந்து கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் , மருந்து பாட்டில்கள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் குவியல் குவியிலாக இங்கு கொட்டப்பட்டு கிடக்கின்றன.

பல தொற்று நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெறக்கூடிய இந்த மருத்துவ வளாகத்தில் குவியல் குவியலாக மருந்து கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுவதால்,
இதிலிருந்து வெளியாகும் நச்சுப் புகைகள் நோயாளிகளை மட்டும் இன்றி அவர்களுடன் வரும் உறவினர்களையும் மிகவும் பாதிப்படைய செய்கின்றன.
மேலும் மருத்துவமனையில் குழந்தைகளும் சிகிச்சை பெறுகிறார்கள். இதிலிருந்து வெளியாக கூடிய இந்த நச்சு புகை குழந்தைகள் , பெண்கள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என அனைவரையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
மருத்துவ வளாகத்தை ஒட்டியுள்ள இந்த மருத்துவ கழிவுகளை எரித்தது குறித்து நெல்லை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் .ரேவதி பாலனிடம் நாம் பேசினோம்.

அவர் கூறுகையில், “அந்த இடம் நமது மருத்துவமனைக்கு அப்பாற்பட்ட இடம் என்றும் அது தனியாருக்கு சொந்தமான இடம் என்றும் கூறுகிறார்.
மேலும் சில விஷமிகள் அங்கு கொட்டி கிடக்கும் மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்து விட்டு சென்றிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஆனால் அந்த இடத்தில் மருத்துவ கழிவுகளை அந்த மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தான் தினமும் கொட்டி செல்வதாக அங்கு இருக்கக்கூடிய நோயாளிகளும் பொதுமக்களும் கூறுகிறார்கள் .
அது குறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலனிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்.
“ஒப்பந்த ஊழியர்கள் சிலர் விவரம் தெரியாமல் அங்கே மருந்து கழிவுகளை கொட்டி இருக்கலாம்.
அவர்கள் யார் என்று சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதே நேரத்தில் அந்த மருத்துவ கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் டாக்டர் ரேவதி பாலன் தெரிவித்தார்.
மருந்து கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சியின் உதவியும் எங்களுக்கு வேண்டும் என்று கல்லூரி டீன் கோரிக்கை வைத்தார்.
கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!
பாஜக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன? – கரு நாகராஜன் பேட்டி!