தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக, இன்று (டிசம்பர் 22 ) மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 25 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று , நாளை மற்றும் டிசம்பர் 24 ஆம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
’மல்லாக்க படுக்க மாட்டேன்’ நயன்தாரா சொன்ன அதிர்ச்சி காரணம்!