இந்திதான் படிக்க வேண்டுமா? கபில் சிபல்

Published On:

| By Jegadeesh

1976 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, திமுகவை சேர்ந்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலனின் அறம் செய்ய விரும்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (நவம்பர் 8 ) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் , சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், சென்னை உயர் நீதிமன்றத்தில்,

யாருக்கு அக்கறை

”குழந்தையின் கல்வி குறித்து அக்கறை கொள்பவர் பெற்றோர்தான் எனவும், எந்த மொழியில் குழந்தையை படிக்க வைக்கலாம் என பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும்.

குழந்தைகள் இந்தி தான் படிக்க வேண்டும் எனக் கூறினால் அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், ”குழந்தைக்கு தெரியாத மொழியில் கல்வியை திணிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

நார்த் பிளாக் முடிவெடுக்க கூடாது

உயர் கல்வியின் தரம் குறித்து தீர்மானிக்க மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், மத்திய அரசின் தலைமைச் செயலகமான டெல்லி நார்த் பிளாக்கில் இருந்து கொண்டு, நாட்டில் உள்ள குழந்தைகள் குறிப்பிட்ட மொழியில் தான் படிக்க வேண்டும் என முடிவெடுக்க முடியாது.

Want to study only Hindi Kapil Sibal

தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் கல்வி எந்த மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது.

மருத்துவ படிப்பு இந்தியில் வழங்கப்படும் என நார்த் பிளாக் அறிவித்துள்ளதாகவும், இதை அனுமதித்தால் ஒரு நாள் தமிழக மாணவரும் இந்தியில் மருத்துவம் படிக்க வேண்டி வரும்” எனவும் அவர் தெரிவித்தார்.

பொது ஒழுங்கு

மேலும் அவர், “அரசியல் சாசனத்தில் பொது ஒழுங்கு என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டு வரப்பட்ட முதல் திருத்தத்துக்கு எதிராக தற்போது தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, 46 ஆண்டுகளுக்கு முந்தைய திருத்தத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதை நியாயப்படுத்தினார்.

மாறுபட்ட கலாச்சாரம்

கல்வி அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தமான கொள்கையல்ல எனவும், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்த பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது.

கல்வியின் தரத்தை தீர்மானிக்க மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்தியில் வருவது மோசம்

மருத்துவம், பொறியியல் புத்தகங்கள் இந்தியில் வரப்போவது மிகவும் மோசமானது எனவும், ஒரே மாதிரியானது என எதுவும் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தன்னாட்சி அந்தஸ்து உள்ளது என்பதால் மாநிலத்தின் கல்வி குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே தகுதி உள்ளது என்றும் கபில் சிபல் வாதாடினார்.

தமிழக அரசு தரப்பிலான அவரது வாதம் நிறைவடையாததால், இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

சிவாஜி படம்: எம்எல்ஏ மீது பாய்ந்த வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel