நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளைச் சரி செய்யும் நோக்கத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதற்கான பணிகள் நாடு முழுவதும் தொடங்கியது. இந்த பணிகளை 2023 மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதற்காக 6பி படிவத்தையும் தனியாகத் தயார் செய்தது. இதன்மூலம் தேசிய வாக்காளர் சேவை அமைப்பின் போர்ட்டல் வாயிலாக இணைத்துக் கொள்ளலாம்.
அல்லது வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இந்த படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து இணைத்துக் கொள்ளலாம்.
இந்த பணிகள் தொடங்கி 5 மாதங்கள் கடந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 94.5 கோடி வாக்காளர்களில் 60 சதவிகிதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்திருப்பதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாகக் கடந்த வாரம் தேர்தல் நடந்து முடிந்த திரிபுரா மாநிலத்தில் 56,90,83,090 வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
இது அம்மாநிலத்தில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 92 சதவிகிதம் ஆகும்.
திரிபுராவைத் தொடர்ந்து லட்சத்தீவில் 91 சதவிகிதம் பேரும், மத்தியப் பிரதேசத்தில் 86 சதவிகிதம் பேரும் ஆதார்- வாக்காளர் அட்டையை இணைத்துள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில் வாக்காளர்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கின்றனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தலா 71 சதவிகிதம் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டில் 61 சதவிகித பேரும், கேரளாவில் 63 சதவிகித பேரும் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்துள்ளனர். குஜராத்தில் மிகக் குறைவாக 31.5% பேர் மட்டுமே இணைத்துள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் 34% பேர் இணைத்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரியலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களில் 97.12 சதவிகிதம் பேர் இணைத்துள்ளனர். அதன்படி வாக்காளர் அட்டை ஆதார் இணைப்பில் அதிக எண்ணிக்கையுடன் தமிழகத்தில் அரியலூர் முதலிடத்தில் இருக்கிறது.
38 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட சென்னையில் 31.83 சதவிகிதம் பேர் இணைத்துள்ளனர். ஆதாரை இணைப்பதில் சென்னை 38ஆவது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது.
பிரியா
ஸ்ரீதேவியின் அறியப்படாத அரிய தகவல்கள்!