காரைக்கால் சிறுவன் மரணம்: எலி பேஸ்ட்டுக்கு தடை?

Published On:

| By Kalai

காரைக்கால் மாணவனுக்கு எந்த வகையான விஷம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றும், வாந்தி, வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவக்குழு அறிக்கை அளித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேருநகர் ஹவுசிங்போர்டைச்  சேர்ந்த ராஜேந்திரனின் 2-வது மகன் பாலமணிகண்டன்.

கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த பாலமணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு, கலை நிகழ்ச்சியிலும் சிறந்து விளங்குபவராகவும் இருந்தார்.

இதனால் பொறாமை கொண்ட சக மாணவியின் தாயான சகாயமேரி, பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் இருந்த சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சிறுவன் பாலமணிகண்டன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 3 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு பாலமணிகண்டன் சற்று தெளிவாகவே பேசியிருக்கிறார். ஆனால் நள்ளிரவில் அவர் திடீரென்று மரணமடைந்தார்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததே மரணத்திற்கு காரணம் என்று கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமராஜர் சாலையில் அவர்கள் மறியலும் செய்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்து பெற்றோரை சமாதானப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை வாங்கி பெற்றோர் அடக்கம் செய்தனர். அதனடிப்படையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி செப்டம்பர் 6 ஆம் தேதி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த காரைக்கால் மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர் குழு, என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்று விசாரணை மேற்கொண்டது.

அதன்பிறகு சிகிச்சை விவரங்கள் குறித்து சுகாதாரத் துறை இயக்குநரிடம் நேற்று (செப்டம்பர் 7)அறிக்கை அளிக்கப்பட்டது. 

அந்த அறிக்கையில், பால மணிகண்டனுக்கு எந்த வகையான விஷம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

அவருக்கு வாந்தி, வயிற்று வலிக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் புதுச்சேரி மாநிலத்தில் எலி பேஸ்ட்டை தடை செய்ய, அரசுக்கு பரிந்துரை செய்ய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது.

கலை.ரா

மாணவன் நன்றாகப் படித்ததால் ஆத்திரம்: குளிர்பானத்தில் விஷம் கொடுத்த சக மாணவியின் தாய்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share