விருதுநகர் சிறையில் கைதிகள் மோதல்!

Published On:

| By Selvam

விருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகள் மோதல் காரணமாக 25 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

விருதுநகர் மாவட்ட சிறையில் உள்ள கைதிகள் கண்ணன் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் சிறையில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் சிறைவாசிகள் தங்கி இருந்த அறையில் உதவி சிறை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது கைதிகள் இருவரும் உதவி சிறை அலுவலரிடம் தகராறு செய்தனர். இதனால் கண்ணன், வடிவேல் முருகன் இருவரையும் தனித்தனியாக வேறு சிறைக்கு மாற்றம் செய்தனர்.

virudhunagar district jail prisoners clash

அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் வடிவேல் முருகன் சிறையில் இருந்த எழுமின் அகமத் என்பவரை கையால் முகத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார்.

உடனடியாக சிறைத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்நிகழ்வு கொண்டு செல்லப்பட்டது. மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட சிறைக்கு நேரில் சென்று மோதல் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

மேலும் காயமடைந்த சிறைவாசி எழுமின் அகமத் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட வடிவேல் முருகன் மற்றும் 25 சிறைக்கைதிகள் உடனடியாக மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

virudhunagar district jail prisoners clash

அப்பொழுது காவல் வாகனத்தில் ஏற மறுத்த வடிவேல் முருகன் காவல் வாகன ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.

அவரை குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி அறிவுரையின் பேரில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் விருதுநகரில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகிறார்.

சிறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து செயல்பட்டதன் அடிப்படையில் சிறைக்குள் பெரும் மோதல் தடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம்: சி.வி.கணேசன்

இணையத்தை கலக்கும் மெட்ரோ டான்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share